ஜெலன்ஸ்கி Reuters
உலகம்

ஜி 20 உச்சி மாநாடு : ”புதினை சந்திக்கத் தயார்” - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வரும் டிசம்பர் மாதம் மியாமியில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Premkumar S

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்டை நாடான ரஷ்யா கடந்த 2022- ஆம் ஆண்டு தாக்குதலைத் தொடங்கிய நிலையில், 4 ஆண்டுகளைக் கடந்தும் போர் நீடித்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இரு நாடுகளும் தொடர்ந்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இப்போரில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் காயமடைந்திருக்கிருக்கின்றனர்.

ரஷ்யா - உக்ரைன் போர்

டிசம்பர் 14 – 15 தேதிகளில் அமெரிக்காவின் மியாமியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு அதிபர் புதின் நேரில் வருகை தந்தால், தானும் அங்கு சென்று அவரைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜெல ன்ஸ்கி கூறியுள்ளார். இச்சந்திப்பு குறித்து பேசிய அவர், "வெறும் வார்த்தைகள் இங்கு முக்கியமல்ல. நான் அவரிடம் என்ன சொல்வேன் அல்லது அவர் என்னிடம் என்ன சொல்வார் என்பது பெரிய விஷயமில்லை; பேச்சுவார்த்தையின் மூலம் கிடைக்கும் நேர்மறையான முடிவுகளே நமக்கு முக்கியம்" என அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரு தலைவர்களுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்க்கமான முடிவுகளை எடுக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜி20 உச்சி மாநாடுகளில் ரஷ்ய அதிபர் புதின் நேரில் பங்கேற்காத நிலையில், இந்த மியாமி மாநாட்டில் அவர் பங்கேற்பாரா மற்றும் இச்சந்திப்பு சாத்தியமாகுமா என்ற எதிர்பார்ப்பு உலகளவில் எழுந்துள்ளது.