செங்கடல் வழியாக பயணித்த இந்திய சரக்கு கப்பல் MSV Faize Noore Oliya மீது ஹொடெய்தா அருகே வெடிபொருள் நிரப்பப்பட்ட படகால் நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பல் மூழ்கியது. இது செங்கடலில் இந்திய வணிகக் கப்பல் மீது நடந்த முதல் தாக்குதல் என கூறப்படுகிறது. 13 இந்தியர்கள் உட்பட 14 பேரும் ஏமன் கடற்படை, கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் உலக கடல் வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பு குறித்து கடும் அச்சத்தை எழுப்பியுள்ளது.
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
செவ்வாய்க்கிழமை, செங்கடல் வழியாக பயணித்துக் கொண்டிருந்த MSV Faize Noore Oliya என்ற இந்திய வணிக சரக்கு கப்பல், ஹொடெய்தா (Hodeidah) அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகு மூலம் தாக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் கப்பல் முழுமையாக மூழ்கியதாகவும் கூறப்பட்டது.
செங்கடலில் இந்திய வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலாக இது கருதப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டி பிராந்திய மோதல் விரிவடைந்து வருவதை காட்டுகிறது. மேலும், உலகின் மிகப் பரபரப்பான கடல் வர்த்தகப் பாதைகளும் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் எழுந்துள்ள கவலைகளை அதிகரித்துள்ளது.
இந்திய அரசுடன் தொடர்ந்து நெருக்கமான ஒருங்கிசைவோடு செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ள ஏமன் அரசு, கப்பல் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. மேலும், ஏமன் கடலோர காவல் படையும், ஏமன் கடற்படையும் இணைந்து மேற்கொண்ட விரைவான மீட்பு நடவடிக்கையை பாராட்டியுள்ள அந்த அரசு, 13 இந்தியர்கள் உட்பட 14 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மோக்கா (Mocha) துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களையும், கடல்சார் போக்குவரத்து விதிகளையும் வெளிப்படையாக மீறும் செயல் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் சர்வதேச கடல் வழித்தடங்களில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தையும், உலக வர்த்தக சுதந்திரத்தையும் நேரடியாக பாதிக்கும் என்றும் ஏமன் அரசு எச்சரித்துள்ளது.
மேலும், துறைமுகங்கள், வணிகக் கப்பல்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு கட்டமைப்புகளை குறிவைத்து ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ள ஏமன் அரசு, இந்த நடவடிக்கைகள் ஏமனின் மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கியதோடு, பிராந்திய நிலைத்தன்மையையும் பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வணிகக் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் மிகுந்த கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியா, சர்வதேச சட்டங்களுக்கு இணங்க கடல் வழிப் போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டும் என்றும், வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஒரு கப்பல் மூழ்கியதோடு முடிவடையும் பிரச்சினையல்ல என்று பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டி, செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாப் அல்-மண்டப் நீரிணை மற்றும் உலகின் மிக முக்கிய வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான சூயஸ் கால்வாய் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணையை மட்டுமே சார்ந்து இருக்காமல், செங்கடல் வழியாக உள்ள மேற்குப் பகுதி துறைமுகங்கள் மூலம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் சவுதி அரேபியாவின் நீண்டகால திட்டத்திற்கும் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் புதிய சவாலாக உருவெடுத்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.