தடுமாறும் அமெரிக்க ராணுவம்? காலியாகும் ஆயுதக் கிடங்கு! THAAD ஏவுகணைகள் காலி?
ஈரான் மீது திட்டமிடப்பட்ட பெரிய தாக்குதலை அமெரிக்கா ஒத்திவைத்ததற்கு முக்கிய காரணமாக ஆயுத கையிருப்பு குறைவு இருப்பதாக CNN தகவல் வெளியிட்டது. CSIS மதிப்பீட்டின்படி, போர் தொடங்குவதற்கு முன் அமெரிக்காவிடம் 2,200 Patriot, 452 THAAD ஏவுகணைகள் இருந்தன. வளைகுடா நாடுகள் வான் பாதுகாப்பு குறைபாடு குறித்து கவலை தெரிவித்த நிலையில், வெள்ளை மாளிகை இந்த குறைவு குறித்த தகவலை மறுத்துள்ளது.
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
கடந்த வார இறுதியில் ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த பெரிய தாக்குதலை ஒத்திவைக்க பாதுகாப்பு ஆயுத கையிருப்பு வேகமாக குறைந்து வருவதும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்ததாக CNN தெரிவித்துள்ளது. ஆனால், வெள்ளை மாளிகை இதை மறுத்துள்ளது. வளைகுடா நாடுகள், குறிப்பாக சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தம் காரணமாகவே அந்த தாக்குதல் ஒத்திவைக்கப்பட்டதாக அது விளக்கம் அளித்துள்ளது.
CSIS அதாவது Centre for Strategic and International Studies மதிப்பீட்டின்படி, ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு அமெரிக்காவிடம் சுமார் 2,200 Patriot ஏவுகணைகளும், 452 THAAD ஏவுகணைகளும் கையிருப்பில் இருந்தன.
அமெரிக்க ராணுவத்தின் நீண்ட தூர, தரையிலிருந்து மிகத் துல்லியமானக வானில் தாக்கும் ஏவுகணைகளும் கிட்டத்தட்ட முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கையிருப்பு குறைவு குறித்து வளைகுடா நாடுகளும் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஈரானின் பதிலடி தாக்குதல்களை எதிர்கொள்ள தங்களது வான் பாதுகாப்புத் திறன் பாதிக்கப்படலாம் என அவை எச்சரித்துள்ளன.
எனினும், இந்த தகவல்களை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. அமெரிக்க ராணுவத்திடம் அதிபர் டிரம்பின் அனைத்து முக்கியமான இலக்குகளையும் நிறைவேற்ற போதுமான அளவு ஆயுதங்கள், வெடிமருந்துகள் கையிருப்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி தெரிவித்துள்ளார். மேலும், 'Operation Epic Fury' நடவடிக்கை அமெரிக்காவை எதிர்ப்பதன் விளைவுகளை உலகுக்கு காட்டியதாகவும், அதே நேரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுத உற்பத்தியை மேலும் அதிகரிக்க அதிபர் டிரம்ப் பாதுகாப்புத் துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

