பிணைக்கைதிகள் விடுதலை எக்ஸ் தளம்
உலகம்

153 பேரை விடுவித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்.. ஆனாலும் ஐ.நா. எச்சரிக்கை! காரணம் இதுதான்!

தங்கள் பிடியில் இருந்த சிறைக் கைதிகளில் 153 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று விடுதலை செய்துள்ளனர்.

Prakash J

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை என்பது இன்று நேற்றல்ல.. பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இதில் காஸாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இப்போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்தில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு அளித்தனர்.

houthi

காஸா மீது இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. மேலும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பொருளாதாரரீதியாக அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்களின் வருவாய் ஆதாரங்களை அமெரிக்க அரசு தடை செய்துள்ளது. மேலும் ஏமன் அரசுக்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார உதவிகளையும் அமெரிக்கா தடை செய்துள்ளது.

இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் உள்பட பலரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதில் தன்னார்வத் தொண்டர்களும் அடக்கம். இந்த கைது நடவடிக்கைக்கான காரணம் வெளியாகவில்லை. இதையடுத்து, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அனைத்து செயல்பாடுகள் மற்றும் பயணங்களை நிறுத்துவதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், தங்கள் பிடியில் இருந்து சிறைக் கைதிகளில் 153 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று விடுதலை செய்துள்ளனர். 153 பேரை ஹவுதி விடுவித்திருப்பதாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆயினும்கூட, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த 7 ஊழியர்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் பிடியில் வைத்துள்ளனர்.

un

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “ஹவுதி பிடியில் இருக்கும் ஏழு பேரையும், 2021 முதல் ஹவுதிகளால் பிடிக்கப்பட்ட அனைத்து ஐ.நா ஊழியர்களையும் உடனடியாக எந்த நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும். ஐ.நா. ஊழியர்களைக் குறிவைப்பது எங்களை நேரிடையாகப் பாதிக்கிறது. ஆகையால் ஹவுதிகள் தங்களது பழைய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

ஏமனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் பிற உதவிகளை வழங்கும் பணிகளில் ஐ.நா. கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.