11 ஊழியர்கள் கைது | ஏமனில் பயணத்தை நிறுத்திய ஐ.நா.!
இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை என்பது இன்று நேற்றல்ல.. பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இதில் காஸாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்தில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். காஸா மீது இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
இதற்கு பதிலடியாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. மேலும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பொருளாதாரரீதியாக அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்களின் வருவாய் ஆதாரங்களை அமெரிக்க அரசு தடை செய்துள்ளது. மேலும் ஏமன் அரசுக்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார உதவிகளையும் அமெரிக்கா தடை செய்துள்ளது.
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் உள்பட11 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியானது. கைது செய்யப்பட்ட அனைவரும் அங்குள்ள நிவாரண குழுக்களைச் சேர்ந்த ஊழியர்கள் என்று கூறப்படுகிறது. இந்த கைது நடவடிக்கைக்கான காரணம் வெளியாகவில்லை. இந்த நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அனைத்து செயல்பாடுகள் மற்றும் பயணங்களை நிறுத்துவதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. தங்கள் அமைப்பின் ஊழியர்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.