சீனாவுடன் நல்ல ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும், இது இருநாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்புவதாக தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் கையிலெடுத்த ஆயுதம்தான் வரிவிதிப்பு.. இரு தரப்புக்குமான போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதலாக வரிவிதித்து அதிர்ச்சி கொடுத்தார். அதேசமயம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்திருந்தார். குறிப்பாக, இந்தியாவுக்கு, 50 சதவீத வரி விதித்த டிரம்ப், சீனாவுக்கு, 155 சதவீத வரி விதிக்கப் போவதாக அறிவித்தார்.
பின்னர் இந்த முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் தென்கொரியாவின் பூசான் நகரில் நாளை நேரடியாகச் சந்திக்கின்றனர். ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் நேரடிச் சந்திப்பு இது. இருநாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக வர்த்தக பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து இருதலைவர்களும் பேச உள்ளனர்.
முக்கியமாக, என்விடியா நிறுவனத்தின் அதிநவீன ஏஐ சிப்களைச் சீனாவுக்கு விற்பனை செய்வதற்கான ஏற்றுமதித் தடைகள் பற்றி ஸி ஜின்பிங் உடன் பேசுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அரிய வகை கனிமங்கள், மற்றும் விவசாயப் பொருட்கள் பற்றியும் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவுடன் நல்ல ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும், இது இருநாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கு இடையே நிலவும் வர்த்தகப் போருக்கு மத்தியில் நடைபெறும் இந்தச் சந்திப்பு உலக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.