சோயாபீன்ஸ் இறக்குமதியை நிறுத்திய சீனா.. பதிலுக்கு சமையல் எண்ணெய்யை வாங்க மறுக்கும் அமெரிக்கா!
சீனாவுடன் சமையல் எண்ணெய் உள்ளிட்ட சில பொருட்கள் வர்த்தகத்தை நிறுத்துவது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதிபராகப் பொறுப்பேற்றது முதல், ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், வர்த்தகரீதியாக அமெரிக்காவால் பல நாடுகள் ஆதாயம் அடைந்து வருவதாகவும், அதே அளவு பலன் அவர்களால் தங்கள் நாட்டிற்குக் கிடைக்கவில்லை என்றும் கூறிவந்த நிலையில், இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக வரிவிதிப்பையும் மேற்கொண்டார். மேலும், பிற நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதத்தில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (பரஸ்பர) வரி விதித்துள்ளார். அந்த வகையில், ஆரம்பத்தில் சீன பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்பட்டு, பின்னர் அது பேச்சுவார்த்தைக்குப் பின்பு 30% வரியாக அமலானது. இந்த நிலையில், அமெரிக்காவிற்கு அரிய கனிமங்கள் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை அதிகரித்தது. நவம்பர் 8 முதல், 17 அரிய மண் பொருட்களில் 12 பொருட்களுக்கு சீனா ஏற்றுமதி வரம்பை விதிக்கவுள்ளது.
அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு விற்பனையாளரும் இவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது என்று அந்த நாடு அறிவித்துள்ளது. அரிய மண் தாதுக்களின் பற்றாக்குறை அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்னைகளை உருவாக்கக்கூடும், ஏனெனில் அவை F-35 போர் விமானங்கள், பிரிடேட்டர் ட்ரோன்கள், வர்ஜீனியா மற்றும் கொலம்பியா வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள், டோமாஹாக் ஏவுகணைகள், ரேடார் அமைப்புகள் போன்றவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்குப் பதிலடியாக சீன பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதலாக 100% வரிவிதித்தது. ஏற்கெனவே சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் நிலையில், தற்போது மொத்தமாக சீனா மீது 130% வரி விதிக்கப்படுகிறது. ட்ரம்பின் இந்த அதிரடி முடிவால், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர்ப் பதற்றம் புதிய உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. இதற்கிடையே, சீனாவுடன் சமையல் எண்ணெய் உள்ளிட்ட சில பொருட்கள் வர்த்தகத்தை நிறுத்துவது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவிலிருந்து சோயா பீனை வாங்குவதை சீனா நிறுத்தியுள்ளது. இது அமெரிக்க விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் சீனா உள்நோக்கத்துடன் சோயாபீன் இறக்குமதியை நிறுத்தி நெருக்கடியில் தள்ள முயல்வதாக ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப சாடியுள்ளார். சீனாவிலிருந்து வாங்கும் சமையல் எண்ணெய்யை தங்கள் நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்றும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய சோயாபீன்ஸ் வாங்கும் நாடு சீனா. இருப்பினும், அமெரிக்காவின் வரி மற்றும் வர்த்தக மோதல்களுக்கு மத்தியில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவிலிருந்து சோயாபீன்ஸ் வாங்குவதற்கு ஆதரவாக சமீபத்திய மாதங்களில் அதன் (அமெரிக்க) கொள்முதலைக் குறைத்துள்ளது. மேலும், 2024ஆம் ஆண்டில் 24.5 பில்லியன் டாலர் அமெரிக்க சோயாபீன் ஏற்றுமதியில் பாதிக்கும் மேலானதை சீனா வாங்கியது. ஆனால் சீனா புதிய ஆர்டர்களை நிறுத்தி வைத்ததால், இந்த ஆண்டு சீனாவுக்கான ஏற்றுமதி மதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. குறைந்த தேவை காரணமாக, சோயா பீன்ஸின் விலை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளது.