சிறந்த ஆங்கில நாவலுக்காக இங்கிலாந்தால் வழங்கப்படும் புகழ்பெற்ற புக்கர் பரிசுக்கான போட்டியில் ஆறு பேரின் பெயர்கள் இறுதிப்பட்டியில் இடம்பெற்றுள்ளன.
புக்கர் பரிசு (Booker Prize) அறக்கட்டளையால் ஆண்டுதோறும் இரண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்று புக்கர் பரிசு; மற்றொன்று சர்வதேச புக்கர் பரிசு. ஒரு படைப்பு முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அந்த படைப்புக்கு புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அதேவேளையில், அந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அதற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுப் பட்டியலில், 2006ஆம் ஆண்டு புக்கர் பரிசு வென்ற கிரண் தேசாய், தனது புதிய நாவலான தி லோன்லினஸ் ஆஃப் சோனியா அண்ட் சன்னி (The Loneliness of Sonia and Sunny) படைப்புக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவருடன் சுசான் சோய், கேட்டி கிதமுரா, பென் மார்கோவிட்ஸ், ஆண்ட்ரூ மில்லர், டேவிட் ஸ்ஸாலே ஆகியோரின் நாவல்களும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. விருதாளர் பெயர் நவம்பர் பத்தாம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
புக்கர் பரிசு 1969 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில், முதலில் நடுவர் குழுவினரால், ஒரு நீண்டபட்டியல் வெளியிடப்படும். அதில் சுமார் 13 படைப்புகள் இடம்பெறும். இந்த நீண்ட பட்டியல் ஆண்டுதோறும் தோராயமாக ஜூலையில் அறிவிக்கப்படும். பின்னர் அதிலிருந்து 6 புத்தகங்களின் குறுகிய பட்டியல் செப்டம்பரில் அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து வெற்றியாளர் அக்டோபர் அல்லது நவம்பரில் அறிவிக்கப்படுவார். புக்கர் பரிசு வெற்றியாளருக்கு £50,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.