global warming Pt web
உலகம்

வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு.. காலநிலை மாற்றம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்!

காலநிலை மாற்றம் குறித்த அதிர்ச்சிகரமான தகவலை உலக வானிலை அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. 2015ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் விதித்த 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை, முதன்முறையாக 2024ஆம் ஆண்டு பூமி கடந்துள்ளது.

PT WEB

பூமியின் வெப்பநிலை தொழில்மயமாவதற்கு முன் இருந்த வெப்பநிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸைக் கடந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகளின் தரவுகளை ஆய்வு செய்த பிறகு, புவி வெப்பமாதல் இந்த அபாயகரமான எல்லையைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக 2024இல் உலகம் முழுவதும் தீவிர வானிலை நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இத்தாலி மற்றும் தென் அமெரிக்காவில் கடுமையான வறட்சி, நேபாளம், சூடான் போன்ற நாடுகளில் உயிரைப் பறிக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ மற்றும் சவுதி அரேபியாவில் ஆயிரக்கணக்கானோரை வெப்ப அலைகள் பலிவாங்கின. அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பேரழிவு தரும் சூறாவளிகள் ஏற்பட்டன.

பிலிப்பைன்ஸ் சூறாவளி

முன்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஏற்பட்ட வெப்ப அலைகள், தற்போது 2.8 மடங்கு அதிகமாக ஏற்படுகின்றன. மேலும், அவை வழக்கத்தை விட 1.2 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பமாக இருக்கின்றன. இந்த அதீத வெப்பம் காடுகளின் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் காட்டுத்தீ எளிதில் பரவுகிறது. எடுத்துக்காட்டாக, 2025 ஜனவரியில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 12 ஆயிரத்து 300 கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. வளிமண்டலம் வெப்பமடைவதால் அது அதிக நீராவியைத் தக்கவைத்துக்கொள்கிறது.

2024ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மூன்றாவது அதிக மழைப்பொழிவைக் கொண்ட ஆண்டாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் 30 நாட்களில் 6 சூறாவளிகள் தாக்கின. அமெரிக்காவிலும் ஹெலன், மில்டன் போன்ற புயல்கள் அடுத்தடுத்துத் தாக்கியது பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், வெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத்தீ போன்ற பேரிடர்கள் இன்னும் மோசமான நிலையை அடையும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.