AI to nuclear weapon  AI
உலகம்

2100-ல் உலகமே அழியும்... அச்சுறுத்தும் 17 பேராபத்துகள்! விஞ்ஞானிகள் விடுத்த பகீர் எச்சரிக்கை!

AI முதல் அணு ஆயுதம் வரை… மனிதகுலத்துக்குக் காத்திருக்கும் 17 பேராபத்துகள்!

PT WEB

2100ஆம் ஆண்டுக்குள் மனிதகுலத்தை அழிக்கக்கூடிய 17 பேராபத்துகளை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அணு ஆயுதப் போர், செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை உலகின் எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்கும். இவ்வாறான ஆபத்துகளை ஒருங்கிணைந்து எதிர்கொள்வது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

செய்தியாளர் - M.மீரா

அணு ஆயுதப் போர், செயற்கை நுண்ணறிவின் (AI) தவறான பயன்பாடு, bio weapons போன்றவை எதிர்காலத்தில் மனிதகுலத்தின் இருப்புக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று தி லான்செட் (The Lancet) இதழில் வெளியான புதிய அறிக்கை எச்சரித்துள்ளது. இந்த ஆபத்துகள் 2100ஆம் ஆண்டுக்குள் மனிதகுலத்தின் அழிவுக்குக்கூட வழிவகுக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதகுலத்தை அச்சுறுத்தும் 17 ஆபத்துகள்!

chatgpt

அடுத்த 75 ஆண்டுகளில் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய 17 முக்கிய ஆபத்துகளை ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். இதில் அணு ஆயுதப் போர், AI-யின் தவறான பயன்பாடு, பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பருமன், மனநலப் பிரச்சினைகள், பெருந்தொற்றுகள் மற்றும் சர்வதேச உதவிகள் குறைக்கப்படுவது ஆகியவை அடங்கும்.

இந்த ஆய்வில் 35 நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆபத்துகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால், அவற்றை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவைத் தவறாகப் பயன்படுத்தி உயிரி ஆயுதங்களை (bio weapons) உருவாக்கும் ஆபத்து இருப்பதாக அறிக்கை எச்சரிக்கிறது. இத்தகைய ஆயுதங்கள் பெருமளவிலான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறலாம். அணு ஆயுதப் போரும் மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய முக்கிய ஆபத்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் வளிமண்டலத்தில் அதிக அளவு புகை மற்றும் துகள்கள் பரவி, சூரிய ஒளி பூமியை அடைவது குறையலாம். இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு, உலகின் பல பகுதிகளில் உணவுப் பற்றாக்குறையும் கடுமையான பஞ்சமும் ஏற்படக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Nuclear weapon

உலக வெப்பநிலை அதிகரிப்பதால் மனிதர்களின் ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படலாம். புவி வெப்பமயமாதலால் 189 கோடி ஆரோக்கியமான வாழ்க்கை ஆண்டுகள் இழக்கப்படுவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வு மதிப்பிட்டுள்ளது.

அதேபோல், சர்வதேச சுகாதார உதவிகள் பெருமளவில் குறைக்கப்பட்டால், 2100ஆம் ஆண்டுக்குள் 150 கோடி ஆரோக்கியமான வாழ்க்கை ஆண்டுகள் வரை இழக்கப்படலாம். இதில் பெரும்பாலான பாதிப்புகள் துணை சஹாரா ஆப்பிரிக்கப் பகுதிகளில் ஏற்படக்கூடும். அங்கு குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்கெனவே முக்கியப் பிரச்சினையாக உள்ளது.

El nino

இந்த ஆய்வுக் குழுவின் இணைத் தலைவர் பேராசிரியர் கிறிஸ்டோபர் முர்ரே, இன்றைய தலைவர்கள் எடுக்கும் முடிவுகள் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே, ஆபத்துகளை முன்கூட்டியே கணித்து, அவற்றைத் தடுப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் அரசுகள் நிதியும் பணியாளர்களும் ஒதுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆபத்துகள் அனைத்தும் நிச்சயம் நிகழும் என்று அறிக்கை கூறவில்லை. இத்தகைய அழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், அவற்றை அலட்சியப்படுத்தாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதே நிபுணர்களின் முக்கிய எச்சரிக்கையாகும்.