செய்தியாளர் - M.மீரா
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், காணாமல் போன தங்களது 3 போர் விமானிகளைக் கத்தார் சிறைபிடித்து வைத்திருப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கத்தார், விமானிகளை சிறைபிடித்து வைக்கவில்லை என்று கூறியுள்ளது. இதனால் கத்தார் மீது ஈரான் ராணுவரீதியிலான தாக்குதல்களை தொடங்குமா என்பது குறித்து இங்கே பார்க்கலாம் .
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்தது. இந்தப் போரின் தொடக்கக் காலத்தில், மார்ச் 2-ம் தேதி ஈரானின் இரண்டு Su-24 ரக போர் விமானங்கள் கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி தாக்குதல் நடத்தச் சென்றன.
அப்போது கத்தார் நாட்டின் வான் பாதுகாப்புப் படை, அந்த இரண்டு ஈரான் விமானங்களையும் சுட்டு வீழ்த்தியது. கத்தார் நாடு, அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டதே இந்த தாக்குதலுக்குக் காரணம். அதாவது கத்தார் தனது எல்லையில் உள்ள அல் உதைத் (Al Udeid) அமெரிக்க ராணுவத் தளத்தைப் பாதுகாப்பதற்காக ஈரான் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது. இதனால் ஈரான் கத்தார் மீது பெரும் கோபத்தில் உள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டு விமானங்களிலும் மொத்தம் 4 ஈரான் ராணுவ வீரர்கள் இருந்தனர் இதில் மஜித் காசெமி என்ற ஒரு விமானி உயிரிழந்தார். அவரது உடல் கத்தாரால் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், மற்ற 3 விமானிகள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. அவர்கள் தற்போதும் காணாமல் போனவர்களாகவே உள்ளனர்.
ஈரான் ராணுவம், அந்த 3 விமானிகளும் விமானம் வீழ்வதற்கு முன்பே பாராசூட் மூலம் குதித்து தப்பித்ததாகக் கூறுகிறது. அவர்கள் கத்தார் மண்ணில் தான் இறங்கினார்கள் என்றும், கத்தார் அரசு அவர்களை உயிருடன் சிறைபிடித்து ரகசிய இடத்தில் வைத்துள்ளதாகவும் ஈரான் உறுதியாக நம்புகிறது. சர்வதேச விதிகளின்படி கத்தார் அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.
ஆனால் கத்தார் அரசு இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுக்கிறது. தாங்கள் யாரையும் சிறைபிடிக்கவில்லை என்றும், தேடுதல் வேட்டையில் ஒரு விமானியின் உடல் மட்டுமே கிடைத்ததாகவும் கூறுகிறது. மேலும், இதுகுறித்த ரேடார் ஆதாரங்களை வந்து சரிபார்க்குமாறு ஈரானுக்கு அழைப்பு விடுத்தும், ஈரான் அதை ஏற்கவில்லை என்றும் கத்தார் கூறுகிறது.
இந்த விவகாரத்தால் ஈரான் கத்தார் மீது கடும் கோபத்தில் உள்ளது. ஈரான் தற்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) உதவியை நாடியுள்ளது. கத்தார் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்கள் மீது ஏற்கனவே சில ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த காணாமல் போன விமானிகள் விஷயத்தில் கத்தாரிடம் இருந்து திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால், கத்தார் மீது ஈரான் நேரடி ராணுவ தாக்குதலைத் தொடங்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.