தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ மற்றும் வெப்ப அலைகளால் பெருமளவில் காற்று மாசுபாடு ஏற்படுவதாக ஐநாவின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், காற்று மாசுபாடும் காலநிலை மாற்றமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவை என்றும், எதிர்காலத்தில் கடுமையான காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் உலக சுகாதார அமைப்பின் காற்றுத் தர இலக்குகளை எட்டுவது கடினமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொழில் துறை மற்றும் போக்குவரத்து உமிழ்வுகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ், கனடா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் ஏற்படும் காட்டுத்தீ காரணமாகக் காற்றில் நச்சுத்தன்மை வாய்ந்த நுண் துகள்களின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. இத்தகைய காட்டுத்தீ புகையைச் சுவாசிப்பது உடலெங்கும் வீக்கத்தை ஏற்படுத்தி, நுரையீரல் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், 1990களுக்குப் பிறகு இத்தகைய காட்டுத்தீ புகை நிகழ்வுகள் மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதனாலேயே ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகரிக்கும் வெப்ப அலை தரைமட்ட ஓசோன் மாசுபாட்டைத் தீவிரப்படுத்துவதால், வரும் தசாப்தங்களில் பல்லாயிரக்கணக்கான முன்கூட்டிய உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.