\
AI Enters the Fields: A New Ally for Farmers
விவசாயம்Chatgpt

வயலில் இறங்கும் செயற்கை நுண்ணறிவு.. உழவனின் புதிய தோழனா AI?

நோய் வந்தபின் மருந்து என்பது பழைய முறை; நோய் வருவதற்கு முன்பே எச்சரிப்பது புதிய வேளாண்மை.
Published on

செய்தியாளர் : அ . இராமதாஸ்

உலகம் எத்தனை தொழில்நுட்பப் புரட்சிகளைக் கண்டாலும், மனிதனின் பசியைத் தீர்ப்பது மண்ணும் உழவனும்தான்.

இதனால் தான்,

“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை”

என ஐயன் திருவள்ளுவர் தெரிவித்தார் .ஒரு காலத்தில் வானத்தைப் பார்த்து மழையை ஊகித்த உழவன், மண்ணைக் கையில் எடுத்துப் பிசைந்து அதன் ஈரத்தை அறிந்தான். இன்று அவன் கைகளில் மண்வெட்டியோடு தொழில்நுட்பமும் இருக்கிறது.

வேளாண்மை
வேளாண்மை ANI

வேளாண்மையின் மிகப்பெரிய சவால் உற்பத்தி மட்டுமல்ல; சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதுதான். எப்போது விதைப்பது, எவ்வளவு உரமிடுவது, எப்போது நீர் பாய்ச்சுவது, பயிரைத் தாக்கியது என்ன நோய், எங்கு நல்ல விலை கிடைக்கும் போன்ற கேள்விகளுக்கு செயற்கைக்கோள் படங்கள், வானிலைத் தகவல்கள், மண்ணின் ஈரப்பதம், சந்தை நிலவரம் உள்ளிட்ட தரவுகளை ஆராய்ந்து AI வழிகாட்ட முடியும்.

மத்திய அரசின் National Pest Surveillance System (NPSS), AI மற்றும் Machine Learning தொழில்நுட்பம் மூலம் பயிர்களில் பூச்சித் தாக்குதலை அடையாளம் காண உதவுகிறது. 2025 இறுதி நிலவரப்படி இது 66 பயிர்களையும் 432-க்கும் மேற்பட்ட பூச்சி வகைகளையும் உள்ளடக்கியிருந்தது. பயிரின் பாதிக்கப்பட்ட பகுதியைப் படம் எடுத்து பதிவேற்றுவதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே தாக்குதலைக் கண்டறியும் வாய்ப்பு உருவாகியுள்ளது. நோய் வந்தபின் மருந்து என்பது பழைய முறை; நோய் வருவதற்கு முன்பே எச்சரிப்பது புதிய வேளாண்மை.

AI Enters the Fields: A New Ally for Farmers
CO₂ உமிழ்வில் முன்னணியில் இருக்கும் நாடுகள்.. காலநிலை மாற்றத்துக்கு யார் காரணம்? #DataStory

வானிலை முன்னறிவிப்பிலும் AI புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. 2025 காரீப் பருவத்தில் 13 மாநிலங்களைச் சேர்ந்த 3.88 கோடி விவசாயிகளுக்கு AI அடிப்படையிலான உள்ளூர் பருவமழை முன்னறிவிப்புகள் அனுப்பப்பட்டன. தமிழகத்திலும் காவிரி டெல்டா நெல் விவசாயி முதல் பொள்ளாச்சி தென்னை விவசாயி வரை, அந்தந்தப் பகுதிக்கும் பயிருக்குமான துல்லியமான வானிலை ஆலோசனையை வழங்க AI உதவ முடியும்.

அதேபோல் மண்ணின் ஈரப்பத உணரிகள், ட்ரோன்கள், செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றுடன் AI-ஐ இணைத்தால், தேவையான இடத்தில், தேவையான நேரத்தில், தேவையான அளவு நீர் மற்றும் உரத்தைப் பயன்படுத்தும் துல்லிய வேளாண்மை சாத்தியமாகும்.

வேளாண்மை
வேளாண்மைANI

எனினும் AI விவசாயின் அனுபவத்திற்கோ வேளாண் அலுவலருக்கோ மாற்று அல்ல; அவர்களுக்குத் துணை. தரவின் துல்லியம், விவசாயிகளின் தனியுரிமை, டிஜிட்டல் அறிவு ஆகியவற்றிலும் கவனம் தேவை.

ஏர்க்கலப்பையின் பின்னால் நடந்த உழவனின் அனுபவமும், செயற்கைக்கோளிலிருந்து வரும் தரவும் கைகோர்க்க வேண்டும். மண்ணின் மணத்தை அறிந்த மனித அறிவும், தரவின் மொழியை அறிந்த செயற்கை நுண்ணறிவும் இணைய வேண்டும்.

நாளைய வயலில் ஏர் இருக்கும்; டிராக்டர் இருக்கும்; ட்ரோன் பறக்கும்; AI ஆலோசனை வழங்கும். ஆனால் விதையை மண்ணில் விதைத்து உலகின் பசியைப் போக்கும் கரங்கள் என்றும் உழவனுடையவையே!

தொழில்நுட்பம் வழிகாட்டட்டும்; அறிவியல் துணை நிற்கட்டும்; உழவனின் வாழ்வு உயரட்டும்!

AI Enters the Fields: A New Ally for Farmers
ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 7 | மனஅழுத்தத்திலும் தீர்வுகள் தரும் மகிழ்ச்சி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com