உயிரிழந்துள்ள க்ரெய்க் யானை x
உலகம்

54 வயதில் சூப்பர் டஸ்கர் வகை யானை உயிரிழப்பு., கென்ய மக்கள் சோகம்!

ஒரு யானையின் மரணத்தால் கென்ய மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சூப்பர் டஸ்கர் வகையைச் சார்ந்த ஒரு யானை இயற்கை மரணமடைவது இதுவே முதல்முறை.

PT WEB

கென்யாவின் அம்போசெலி தேசியப் பூங்காவில் புகழ்பெற்ற சூப்பர் டஸ்கர் யானையான க்ரெய்க் 54 வயதில் இயற்கை காரணங்களால் உயிரிழந்தது. இதனால் கென்ய மக்கள் மற்றும் வனவிலங்கு காதலர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். க்ரெய்க், கென்ய அரசின் பாதுகாப்பு முயற்சிகளின் வெற்றிச் சின்னமாகவும், ஆப்ரிக்காவின் இயற்கை பாரம்பரியத்தின் சின்னமாகவும் திகழ்ந்தது.

ஒரு யானையின் மரணத்தால் கென்ய மக்களே துயரத்தில் இருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா? தரையைத் தொடும் நீளமான தந்தங்கள், புராண காலத்து யானையோ என்று எண்ண வைக்கும் தோற்றம்.. அதுதான் க்ரெய்க் (Craig) யானை. இந்த யானை உயிரிழந்ததுதான் கென்ய மக்களுக்கும், வனவிலங்கு காதலர்களுக்கும் சோகச் செய்தியாக மாறியிருக்கிறது.

அம்போசெலி தேசியப் பூங்கா, கென்யா

க்ரெய்க் என்று அழைக்கப்பட்ட அந்த யானை, கென்யாவின் தெற்கே உள்ள அம்போசெலி தேசியப் பூங்காவில் சனிக்கிழமை காலை இயற்கைக் காரணங்களால் உயிரிழந்ததாக வனவிலங்குப் பாதுகாவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, சூப்பர் டஸ்கர் யானை ஒன்று இயற்கைக் காரணங்களால் உயிரிழப்பது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. “சூப்பர் டஸ்கர்” என அழைக்கப்படும் இந்த வகையான யானைகளின், ஒவ்வொரு தந்தமும் 45 கிலோகிராம்களுக்கு மேல் எடையிருக்கும். “டஸ்கர்” என்பது தந்தங்கள் உள்ள வளர்ந்த ஆண் யானைகளுக்கும் பயன்படுத்தப்படும் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரிய வகை யானைகளாக இந்த சூப்பர் டஸ்கர் வகை யானைகள் இருப்பதால் வேட்டைக்காரர்களுக்கு மிகவும் பிடித்த வகை யானைகளில் ஒன்று. அதோடு, இந்த வகை யானைகளின் மிகப்பெரிய தந்தங்கள்தான் வேட்டைக்காரர்களின் முதன்மை இலக்கு. அப்படி, சூப்பர் டஸ்கர் வகை யானைகள் மட்டுமல்லாமல் யானை இனமே தேடித்தேடி வேட்டையாடப்பட்ட காலம் ஒன்று இருந்தது. 1979 ஆம் ஆண்டில் சுமார் 13 லட்சமாக இருந்த ஆப்ரிக்க யானைகளின் எண்ணிக்கை, 1989 ஆம் ஆண்டில் சுமார் 6 லட்சமாக சரிந்தது. இன்று அந்த எண்ணிக்கை 4 லட்சம் முதல் 4.15 லட்சம் வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

க்ரெய்க் யானை

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் கென்ய அரசு வன உயிரிகளைப் பாதுகாக்கவும் குறிப்பாக சூப்பர் டஸ்கர் வகை யானைகளைப் பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொடர்ச்சியான கண்காணிப்பு, யானை வேட்டையை தடுக்கும் நடவடிக்கைகள், வாழ்விட பாதுகாப்பு மற்றும் சமூக பங்கெடுப்பு போன்ற நடவடிக்கைகளின் வெற்றிதான் கென்யாவில் யானைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டில் சுமார் 36,000 யானைகள் இருந்த நிலையில், தற்போது, அது 42,000-ஐ கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரி.. ஏன் இப்போது இத்தகைய தகவல்கள் என்றால், க்ரெய்க் சுதந்திரமாக சுற்றித்திரிந்ததற்கும் கென்ய அரசின் இத்தகைய நடவடிக்கைகளே காரணம் என்கின்றனர் வனவிலங்கு ஆய்வாளர்கள். கென்ய அரசு மேற்கொண்ட பாதுகாப்பு முயற்சிகளின் வெற்றிச் சின்னமாகவே க்ரெய்க் கருதப்படுகிறது. ஏனெனில், இன்றைய காலக்கட்டத்தில் டஸ்கர் வகையான யானைகள் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதால் க்ரெய்க் ஆப்ரிக்காவின் இயற்கை பாரம்பரியத்தின் சின்னமாகத் திகழ்ந்தது.

க்ரெய்க் யானை

இதுதொடர்பாக கென்யா வன உயிரியல் சேவை அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “கென்யாவின் அம்போசெலி தேசியப் பூங்காவில் கம்பீரமான தோற்றத்திற்காகப் புகழ்பெற்ற பழம்பெரும் சூப்பர் டஸ்கர் யானையான க்ரெய்க் தனது 54 வயதில் காலமானது. அதீத அமைதியான பண்புக்காக க்ரெய்க் அனைவராலும் நேசிக்கப்பட்டது. பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும்போதும், க்ரெய்க் பொறுமையாக நின்று போஸ் கொடுப்பது வழக்கம். அதை பாதுகாத்த எண்ணற்றோரின் முயற்சிகளின் விளைவால் க்ரெய்க் அமைதியான மற்றும் இயற்கை முறையில் உயிரிழந்தது” எனத் தெரிவித்திருக்கிறது.

க்ரெய்க் யானையின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டில், கென்யாவின் பிரபலமான டஸ்கர் பீர் பிராண்டின் தூதராக க்ரெய்க் அறிவிக்கப்பட்டது. அதோடு, ஈஸ்ட் ஆப்ரிக்கன் பிரூவரீஸ் நிறுவனம் அந்த யானையை தத்தெடுத்தது. கடந்த ஆண்டு மட்டும் 20 லட்சம் மக்கள் கென்யாவிற்கு சுற்றுலாவிற்காக வந்திருக்கிறார்கள். அதில் கிட்டத்தட்ட சரிபாதிபேர் உலகப் புகழ்பெற்ற கென்யாவின் தேசிய பூங்காக்களில் உள்ள வன உயிரினங்களை காண வந்தவர்கள். மிக முக்கியமாக க்ரெய்க் யானையைக் காணவந்தவர்கள். கென்யாவின் சுற்றுலா துறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 10 சதவீதம் பங்களிப்பு அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்படி, கென்ய பொருளாதாரத்தின் ஓர் அங்கமாகவும் இருந்த க்ரெய்க் உயிரிழந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.