ட்ரம்ப் - புடின் சந்திப்புக்கு அலாஸ்கா ஏன் தேர்வு பேச்சுவார்த்தையில் என்ன நடக்கும்?  முகநூல்
உலகம்

ட்ரம்ப் - புடின் சந்திப்புக்கு அலாஸ்கா ஏன் தேர்வு? பேச்சுவார்த்தையில் என்ன நடக்கும்?

அலாஸ்கா புவியியல் ரீதியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு மத்தியிலான இடம். ரஷ்யாவின் கிழக்கு எல்லைக்கும், அமெரிக்காவின் மேற்கு எல்லைக்கும் இடையில் இருப்பதால் இரு தலைவர்களுக்கும் பயண வசதியாகவும், மிட்வே பாயிண்ட் போல் நடுநிலையாகவும் அமைகிறது .

PT WEB

ரஷ்யா - உக்ரைன் போர்

உலக நாடுகளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் - புடின் சந்திப்பு அலாஸ்காவில் நடைபெறுகிறது. இந்த இடம் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக யுத்தம் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தநிலையில், உக்ரைன் ஒப்புக் கொண்ட போதிலும், ரஷ்யா தட்டிக் கழித்தது.

இந்தநிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார். அதன்படி இந்தியாவுக்கு 50 சதவிகித வரியையும் விதித்தார். உக்ரைன் போர், வரி விவகாரத்திற்கு மத்தியில், அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க விருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ட்ரம்ப் -புடின் சந்திப்பின் முக்கிய நோக்கம் என்ன?

ட்ரம்ப் -புடின் சந்திப்பின் முக்கிய நோக்கம் உக்ரைன் யுத்தத்தை நிறுத்துவதுதான். அப்போது, சிலப் பகுதி பரிமாற்றங்கள் தொடர்பாகவும் உரையாடப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, உக்ரைனில் ரஷ்யர்கள் அதிகம் வசிக்கும் மூன்று இடங்களை தங்களுடன் இணைக்க வேண்டும் என புடின் வலியுறுத்தி வருகிறார். இதனால் இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது. இதில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கலந்து கொள்ளவில்லை.

ட்ரம்ப் - புடின் சந்திப்புக்கு அலாஸ்கா ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்தும் பேசப்படுகிறது. அலாஸ்கா புவியியல் ரீதியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு மத்தியிலான இடம். ரஷ்யாவின் கிழக்கு எல்லைக்கும், அமெரிக்காவின் மேற்கு எல்லைக்கும் இடையில் இருப்பதால் இரு தலைவர்களுக்கும் பயண வசதியாகவும், மிட்வே பாயிண்ட் போல் நடுநிலையாகவும் அமைகிறது .

ட்ரம்ப் -புடின்

பெரும் கவனத்தை ஈர்த்த அலாஸ்கா..ஏன்?

இரண்டாவதாக, அலாஸ்கா, எந்த ஒருநாட்டின் தலைநகரிலும் இல்லாததால், அரசியல் பாகுபாடில்லாத நடுநிலை மேடையாகக் கருதப்படுகிறது. அதனால் இரு தரப்பும் எங்களுக்கு சாதகமில்லை என்ற எண்ணமின்றி சமநிலையில் பேசும் வாய்ப்பு கிடைக்கிறது. மூன்றாவதாக, அலாஸ்கா ஒரு அரசியல் சின்னமாக சர்வதேச கவனத்தை ஈர்க்கும் இடம். குளிர்போர் காலத்தில் அமெரிக்கா - ரஷ்யா இடையேயானபுவியியல் நெருக்கத்தை சுட்டிக்காட்டும் பகுதியாக இருந்தது. இப்போது, அதே இடத்தில் உக்ரைன் போர் நிறுத்தத்திற்கான சமாதானம் நடப்பது உலகத்திற்கு பழைய எதிரிகள் கூட பேச்சு நடத்தலாம் என்ற வலுவான செய்தியை உலக அரசியலுக்கு தருகிறது.

மொத்தத்தில் அலாஸ்கா தேர்வு, பயண எளிமை, நடுநிலைச் சூழல், பாதுகாப்பு மற்றும் சர்வதேச சின்னவியல் ஆகிய காரணங்களை ஒருங்கிணைக்கும் திட்டமிடப்பட்ட முடிவாகவே பார்க்கப்படுகிறது. எனவே, ட்ரம்ப் - புடின் பேச்சுவார்தைக் குமுன்னரே உலக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து விட்டது அலாஸ்கா.