யார் சாமி நீ.. லீவ் கேட்டவருக்கு வாழ்த்து கூறி அனுப்பிய மேனேஜர்! குவியும் பாராட்டு
வேலை அழுத்தம் நிறைந்த உலகில், ஊழியர்கள் விடுமுறை எடுப்பது ஒரு போராட்டமாகவே உள்ளது. இந்தச் சூழலில் நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்நிறுவனத்தில் பணியாற்றும் கனிகா, சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதற்கு முந்தைய இரண்டு நாட்களுக்கு விடுமுறை கேட்டுள்ளார். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை சேர்த்து ஐந்து நாட்கள் நீண்ட விடுப்பு கிடைக்கும் என்பதால் அவர் இந்த விடுமுறையை நாடியுள்ளார்.
சர்ப்ரைஸ் கொடுத்த மேனேஜர்..
கனிகாவின் மேலாளர், விடுமுறையை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், ஒரு வாழ்த்துச் செய்தியுடன் அதை அனுப்பியுள்ளார்.
அந்தச் செய்தியில், "தாராளமாக விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். பயணத்தை முழுமையாக அனுபவியுங்கள். தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்த்து, புத்துணர்ச்சி பெறுங்கள். உங்கள் அலுவலகப் பணிகளை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கனிகா சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
விடுப்பு விவகாரத்தில், பெரும்பாலான அதிகாரிகளுக்கு மத்தியில் எங்கள் மேனேஜர் தனித்துவமாக விளங்குகிறார் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.