சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் (Lawrence Wong) ஆண்டு ஊதியம் அக்டோபர் 15 முதல் 64 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. இதனால் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரதமராக லாரன்ஸ் வோங் தொடருகிறார். அதுகுறித்து இப்போது பார்க்கலாம்...
சிங்கப்பூரின் புதிய ஊதியக் கட்டமைப்பின்படி, பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு வருமானம் 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக உயர்த்தப்பட உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 26 கோடியே 9 லட்சம் ரூபாய் ஆகும். இதன்மூலம், உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அரசுத் தலைவர் என்ற இடத்தை லாரன்ஸ் வோங் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்கிறார். 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூர் அமைச்சர்களின் ஊதியத்தில் நடக்கும் முதல் பெரிய மாற்றம் இதுவாகும். பிரதமரைத் தவிர்த்து இதர அமைச்சர்களின் அடிப்படை ஊதியமும் 1.1 மில்லியன் சிங்கப்பூர் டாலரில் இருந்து 1.8 மில்லியன் சிங்கப்பூர் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும் ஒவ்வொரு அமைச்சருக்கும் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளின் அடிப்படையிலேயே இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் அரசியல் தலைவர்களுக்கு அதிக ஊதியம் வழங்குவது நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் ஒரு நடைமுறையாகும். அரசு நிர்வாகத்தில் ஊழல் ஏற்படுவதைத் தடுக்கவும், திறமையானவர்களை அரசியலுக்கு ஈர்க்கவும் இது அவசியமானது என சிங்கப்பூர் அரசு கருதுகிறது.
இருப்பினும், சாமானிய மக்கள் சம்பாதிக்கும் தொகையை விட அரசியல்வாதிகளின் சம்பளம் பல மடங்கு அதிகமாக இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை உணர்ந்த பிரதமர் வோங், ஊதிய உயர்வால் கிடைக்கும் கூடுதல் தொகையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.