கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுருவாக இருந்த போப் பிரான்சிஸ் (88), காலமானதைத் தொடர்ந்து, அடுத்த தலைவர் பற்றிய நடைமுறைகள் வேகம்பிடித்தன. அந்த வகையில், புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கார்டினல்கள் மாநாடு, கடந்த மே 7ஆம் தேதி வாடிகனிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் மூடிய அரங்கத்தில் தொடங்கியது. உலகம் முழுவதும் 252 கார்டினல்கள் உள்ள நிலையில், அதில் 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் ஒன்றுகூடி ரகசியமாக நடத்தும் ஓட்டெடுப்பில், மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறும் நபர், அடுத்த போப் ஆக தேர்வு செய்யப்படுவார். அதன்படி, இந்த வாக்கெடுப்பில் 133 கார்டினல்கள் கலந்துகொண்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முதல் நாளில் (மே 7) முடிவு எட்டப்படாத நிலையில், கறுப்புப் புகை வெளியேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று காலை நடைபெற்ற வாக்கெடுப்பிலும் முடிவு எட்டப்படாததால் இரண்டாவது நாளிலும் கறுப்புப் புகை வெளியேற்றப்பட்டது. இதனால், அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். பின்னர், உணவு மற்றும் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் வாக்கெடுப்பு தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவு புதிய போப் தேர்வானதைக் குறிக்கும் வகையில், வெள்ளைப் புகை வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு, புதிய போப் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகின. அதன்படி, லத்தீன் அமெரிக்காவில் நீண்டகால மிஷனரியாக இருந்த கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட், கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பிறகு அவர் ஆற்றிய முதல் உரையில், “உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும். எங்களை ஆசீர்வதித்த போப் பிரான்சிஸின் பலவீனமான ஆனால் எப்போதும் துணிச்சலான குரலை நாங்கள் இன்னும் எங்கள் காதுகளில் கேட்கிறோம். கடவுளுடன் ஒன்றுபட்டு கைகோர்த்து, ஒன்றாக முன்னேறுவோம்” என்றார்.
அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த 69 வயதான ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட், போப் பதவியை வகிக்கும் முதல் அமெரிக்கர் ஆவார். ஆனால் பெருவில் மிஷனரியாக பல ஆண்டுகள் கழித்ததால் லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு கார்டினலாகவும் கருதப்படுகிறார். மேலும், அவர் லியோ XIV என்ற பெயரைப் பெற்றுள்ளார். 1955ஆம் ஆண்டு சிகாகோவில் ஸ்பானிஷ் மற்றும் பிராங்கோ-இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர் ஆவார். போப் லியோ, பென்சில்வேனியாவில் உள்ள வில்லனோவா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும் சிகாகோவின் கத்தோலிக்க இறையியல் ஒன்றியத்தில் இறையியலில் டிப்ளோமா பெற்றார். மேலும் அவர், பெருவின் ட்ருஜிலோவில் உள்ள செமினரியில் நியதிச் சட்டத்தை முடித்தார். போப் லியோ அமெரிக்கா மற்றும் பெருவின் இரட்டை குடியுரிமையையும் கொண்டுள்ளார்.
அவர் உள்ளூர் திருச்சபை போதகராகவும், பெருவின் ட்ருஜிலோவில் உள்ள ஒரு செமினரியில் ஆசிரியராகவும் 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் மற்றொரு பெருவியன் நகரமான சிக்லாயோவின் பிஷப்பாக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் 2014 முதல் 2023 வரை பணியாற்றினார். போப் லியோ, உலகம் முழுவதும் பரவியுள்ள அகஸ்டீனிய சபையைச் சேர்ந்தவர். அவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் முந்தைய ஜெனரலாக அந்த சபையை வழிநடத்தினார். பிஷப் வேட்பாளர்களை மதிப்பிடுவதற்கும் புதிய நியமனங்களுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் பொறுப்பான ஆயர்களுக்கான டிகாஸ்டரியின் தலைவராக 69 வயதான அவரை, மறைந்த போப் பிரான்சிஸ் நியமித்தார். அவர் ஜனவரி 2023இல் பேராயரானார். சில மாதங்களுக்குள், போப் பிரான்சிஸ் அவரை கார்டினலாக ஆக்கினார். பிரீவோஸ்ட் டென்னிஸ் விளையாட்டின் ரசிகர் என்றும் கூறப்படுகிறது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் லியோ XIV, ஏற்கெனவே தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 2006ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு பள்ளிக்கு அவர் வருகை தந்ததாகக் கூறப்படுகிறது. 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இரண்டாவது முறையாக கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே ஊத்துக்குளியில் உள்ள செண்பகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு அவர் வருகை தந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பள்ளி சிகாகோவைத் தலைமையிடமாகக் கொண்ட அகஸ்டினியன்களால் நடத்தப்படுகிறது. இந்தப் பள்ளியின் வாசலுக்கு முன்னால் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவரது வருகை குறித்து அகஸ்டினியன்களின் பிராந்திய விகார் பாதிரியார் வில்சன் ஓஎஸ்ஏ, “புன்னகையுடன், அவர் மிகவும் அன்பானவராகவும், எளிமையாகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும் இருந்தார். அவர் எங்களுடன் கலந்துரையாடினார். அவரது வருகையின்போது நான் ஒரு குருத்துவ குருவாக இருந்தேன். நம்பமுடியாத அளவிற்கு எளிமையானவர்" என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
முன்னதாக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் லியோ XIV, புனித அகஸ்டின் ஆணை ஜெனரலாக இருந்த காலத்தில் இரண்டு முறை (2004 மற்றும் 2006) இந்தியாவுக்கு வந்துள்ளார். 2004ஆம் ஆண்டில் அவர் மேற்கொண்ட முதல் வருகையின்போது, கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள மரியபுரம், ஆலுவா (வெராபோலி மறைமாவட்டத்தில்) மற்றும் எடகொச்சி (கொச்சி மறைமாவட்டத்தில்) ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளார். அடுத்து 2006ஆம் ஆண்டு வருகையின்போது, ஆலுவாவில் நடைபெற்ற புனித அகஸ்தீனிய ஆணை ஆசிய-பசிபிக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். தவிர, தலப்புழாவில் உள்ள செண்பகம் திருச்சபை மற்றும் கேரளாவின் காலிகட் மறைமாவட்டத்திற்கும் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது, தமிழ்நாட்டின் பொள்ளாச்சிக்கும் சென்றுள்ளார்.