பிரெட்ரிக் மெர்ஸ் எக்ஸ் தளம்
உலகம்

ஜெர்மனி | அடுத்த பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ்.. யார் இவர்?

ஜெர்மனியில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Prakash J

ஜெர்மனியில் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி ஆட்சியில் இருந்தது. கடந்தாண்டு நவம்பரில் கூட்டணி கட்சியை சேர்ந்த நிதியமைச்சரை அதிபர் பதவி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியடைந்ததால் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பிரெட்ரிக் மெர்ஸ்

இந்நிலையில், நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் கட்சி சார்பில் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக கட்சி சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், AFD சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர்.

இந்நிலையில், மெர்ஸின் கட்சி 28.5 விழுக்காடு வாக்குகளையும், வலது சாரியான AFD 20 விழுக்காடு வாக்குகளை பெறும் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ஓலாப் ஸ்கால்சின் சமூக ஜனநாயக கட்சி 16.5 விழுக்காடு வாக்குகளை பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் ஜெர்மனியின் பிரதமராக மெர்ஸ் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

யார் இந்த ஃபிரெட்ரிக் மெர்ஸ்?

ஜெர்மனியின் பிரிலோன் நகரில் நவம்பர் 11, 1955 அன்று பிறந்த மெர்ஸ், சட்டத் துறையில் வலுவான பின்னணியைக் கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர். மெர்ஸ் 1976இல் சட்டம் படித்தார். 1972 முதல் CDU கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார். அவர் 1981இல் சார்லோட் மெர்ஸை திருமணம் செய்தார். அவர் ஒரு சக வழக்கறிஞராகவும் இப்போது ஒரு நீதிபதியாகவும் இருக்கிறார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 1989ஆம் ஆண்டில், மெர்ஸ் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். CDU-வில் முக்கிய பதவிகளை வகித்த மெர்ஸ், 2000ஆம் ஆண்டில் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரானார்.

friedrich merz

இருப்பினும், 2002ஆம் ஆண்டில் அவர் அந்தப் பதவியை ஏஞ்சலா மெர்க்கலுக்கு விட்டுக்கொடுத்தார். 2005ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் பின்னடைவுக்குப் பிறகு, CDU/CSU கூட்டணி SPD உடன் இணைந்து ஜெர்மனியில் ஒரு அரசாங்கத்தை அமைத்தபோது, ​​மெர்ஸ் ஓரங்கட்டப்பட்டு 2009இல் தீவிர அரசியலைவிட்டு வெளியேற முடிவு செய்தார். பின்னர் அவர் சட்டம் மற்றும் நிதித்துறையில் உயர்ந்த நிலையை அடைந்தார். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2018ஆம் ஆண்டில் மெர்க்கல் ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு, மெர்ஸ் அரசியலில் மீண்டும் நுழைந்தார். 2021ஆம் ஆண்டு ஜெர்மன் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக மெர்ஸ் வெற்றிபெற்றார். இருப்பினும், அவரது கட்சி தோல்வியைச் சந்தித்தது. 2022ஆம் ஆண்டில், அவர் CDUஇன் தேசியத் தலைவரானார்.