கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுருவாக இருந்த போப் பிரான்சிஸ் (88), காலமானதைத் தொடர்ந்து, அடுத்த தலைவர் பற்றிய நடைமுறைகள் வேகம்பிடித்து வருகின்றன. அந்த வகையில், புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கார்டினல்கள் மாநாடு நேற்று வாடிகனிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் மூடிய அரங்கத்தில் தொடங்கியது. உலகம் முழுவதும் 252 கார்டினல்கள் உள்ள நிலையில், அதில் 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் ஒன்றுகூடி ரகசியமாக நடத்தும் ஓட்டெடுப்பில், மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறும் நபர், அடுத்த போப் ஆக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டளிக்கும் தகுதியான கார்டினல்கள் எண்ணிக்கை இதுவரை 120 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 136 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வாக்கெடுப்பில் தற்போது 133 கார்டினல்களே கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், புதிய போப்பை தோ்ந்தெடுப்பதற்கான தேர்தலில், முதல்கட்ட வாக்கெடுப்பு தொடங்கியபோதும், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதாவது, நேற்று நடைபெற்ற முதல்கட்ட வாக்கெடுப்பில் போப் தேர்தலில் போட்டியிட்ட யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து, போப் தேர்வில் முடிவு எட்டப்படவில்லை என்ற அறிவிப்பை தெரிவிக்கும் விதமாக, தேவாலயத்தில் இணைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டில் கரும்புகை வெளியேற்றப்பட்டது. இதனால், செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திற்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் கார்டினல்கள் பங்கேற்றனர். ஆனால் அதிலும் முடிவு எட்டப்படாததால், கரும் புகை வெளியேற்றப்பட்டது. பின்னர் ஓய்வு எடுக்கச் சென்ற கார்டினல்கள், இன்று இந்திய நேரப்படி இரவு நேரத்தில் ஒன்று கூடி ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இதன் முடிவில் புகை போக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது. இதன்மூலம் புதிய போப் தேர்வு செய்யப்பட்டார். இதனையறிந்து அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புதிய போப் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் புகைக்கூண்டில் வெள்ளை நிறப் புகை வெளியேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி ஐந்து போப்களில் மூன்று பேர் மாநாட்டின் இரண்டாவது நாளில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.