ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

அதிபர் ட்ரம்ப்க்கு ஏமாற்றத்தைத் தந்த நோபல் பரிசு.. வெள்ளை மாளிகை விமர்சனம்!

ட்ரம்பிற்கு நோபல் பரிவு வழங்கப்படாத நிலையில், நார்வே நோபல் கமிட்டியை வெள்ளை மாளிகை கடுமையாக விமர்சித்துள்ளது.

Prakash J

ட்ரம்பிற்கு நோபல் பரிவு வழங்கப்படாத நிலையில், நார்வே நோபல் கமிட்டியை வெள்ளை மாளிகை கடுமையாக விமர்சித்துள்ளது.

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான விருதுகள் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

ட்ரம்ப், நோபல் பரிசு

அந்த வகையில், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி என 5 துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு மட்டுமே எஞ்சியிருக்கிறது. அது, அக்டோபர் 13ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக, தனக்கே நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ட்ரம்ப்க்கு நோபல் வழங்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்டநாடுகள் பரிந்துரை செய்திருந்த நிலையிலும், நோபல் குழுவின் முடிவு வேறுவிதமாக அமைந்தது.

சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்திற்காகப் போராடும் வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினாமச்சடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு அர்ப்பணிக்கிறேன் என நோபல் பரிசு வென்ற மரியா கொரினாமச்சடோ தெரிவித்துள்ளார். இதற்கிடையே ட்ரம்பிற்கு நோபல் பரிவு வழங்கப்படாத நிலையில், நார்வே நோபல் கமிட்டியை வெள்ளை மாளிகை கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் செயுங், "அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது.

டொனால்டு ட்ரம்ப்

ஆனால், டொனால்டு ட்ரம்ப் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதைத் தொடர்ந்து செய்வார். போரை முடிவுக்குக் கொண்டு வருவார். மக்கள் உயிரைக் காப்பாற்றுவார். அவர் மனிதாபிமான இதயத்தைக் கொண்டுள்ளார். ட்ரம்ப் தனது விருப்பத்தின் சக்தியால் மலைகளைக்கூட நகர்த்துவார். அவரைப் போன்று எவரும் இருக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார். ஆனால், டொனால்டு ட்ரம்ப் இதுதொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், நோபல் செயல்முறையை நெருக்கமாகக் கவனித்தவர்கள், ட்ரம்பின் காஸா ஒப்பந்தம் இந்த ஆண்டு பரிசுக்கு பரிசீலிக்க மிகவும் தாமதமாகிவிட்டதாக ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர். பொதுவாக, நோபல் பரிசு விருது என்பது 2024ஆம் ஆண்டின் சாதனைகளை உள்ளடக்கி வழங்கப்பட்டுள்ளது.