ட்ரம்ப் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த அர்மேனியா, அஜர்பைஜான் நாடுகள்..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-க்கு நோபல் பரிசு வழங்க மேலும் இரண்டு நாடுகள் பரிந்துரைத்துள்ளன. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த வரலாற்றுச் சந்திப்பில், அர்மேனியா - அஜர்பைஜான் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அர்மேனியப் பிரதமர் நிக்கோல் பாஷினியன் மற்றும் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ட்ரம்ப் தலைமையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் அனைத்து போர்களையும் நிறுத்தி, வர்த்தகம், பயணம் மற்றும் தூதரக உறவுகளை புதுப்பித்து, ஒருவரது நிலப்பரப்பு இறையாண்மையை மற்றொருவர் மதிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். ஒப்பந்தத்தின் பகுதியாக, அர்மேனியா வழியாக அஜர்பைஜானின் நக்ஷிவான் பகுதியை இணைக்கும் புதிய போக்குவரத்து வழி உருவாக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்து தீர்வுகாண உதவிய அமெரிக்க அதிபர்டொனால்ட் ட்ரம்ப்-க்கு இரு நாடுகளின் தலைவர்களும் பாராட்டு தெரிவித்து, அவரை நோபல் அமைதி பரிசுக்குப் பரிந்துரைத்தனர். ஏற்கனவே பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் கம்போடியா உள்ளிட்ட பல நாடுகளும் ட்ரம்பை நோபல் அமைதி பரிசுக்குப் பரிந்துரைத்துள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் குறைய ட்ரம்ப் வகித்த பங்கு முக்கியமானது என பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கம்போடியப் பிரதமர் ஹுன் மாணெட் ஆகியோரும் ட்ரம்பின் அமைதித் தூதர் தன்மையைப் பாராட்டி நோபல்கமிட்டிக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.