அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், திடீரென 27% குறைந்தது.
அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் ஒரு வாரத்தை தாண்டி நடைபெறும் நிலையில், இந்த போர் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 40% பங்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அந்த வர்த்தகம் பெரும்பாலும் முடங்கியுள்ளது.
இதனால் கச்சா எண்ணெய்க்கு உலகளவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம், அதாவது மார்ச் 9ம் தேதியன்று, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 119 அமெரிக்க டாலர்கள் என வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச விலையை எட்டியது.
இந்த போர் காரணமாக இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கனவே சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்தது அத்தியாவசிய பொருள்களின் விலையையும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்தது.
ஆனால் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், கச்சா எண்ணெய் விலை இன்று ஒரே நாளில் 27 சதவீதம் சரிவடைந்து 86 அமெரிக்க டாலர்கள் என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்த திடீர் விலை குறைவுக்கு பல்வேறு காரணங்களும் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் உடனான போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்றும், பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். இது முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்த அச்சத்தைப் போக்கி, விலையைச் சரிவடையச் செய்தது.
மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் தொலைபேசி வாயிலாகப் பேசி, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கத் தீர்வுகளை ஆலோசித்ததாக செய்திகள் வெளியாகின. இது கச்சா எண்ணெய் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை அளித்தது.
இது எல்லாவற்றையும் விட ஜி7 (G7) நாடுகள் தங்கள் அவசரக்காலக் கையிருப்பில் (Emergency Oil Reserves) உள்ள கச்சா எண்ணெயை சர்வதேச சந்தைக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
நேற்று ஜி7 நிதி அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி முகமை (IEA) இடையிலான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சந்தையில் விநியோகத்தை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், குறிப்பாகக் கையிருப்பு எண்ணெயை வெளியிடுவது உள்ளிட்ட முடிவுகளை எடுக்கத் தயார் என்றும் ஜி7 நாடுகள் அறிவித்தன.
இதுவே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.