pak. passport, uae x page, reuters
உலகம்

பாகிஸ்தானுக்கு விசா வழங்குவதை நிறுத்திய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.. பின்னணியில் இருக்கும் காரணம்!

பாகிஸ்தான் குடிமக்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸை அடைந்த பிறகு, குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற கவலையின் காரணமாக அந்நாட்டு அரசு அவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது.

Prakash J

பாகிஸ்தான் குடிமக்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸை அடைந்த பிறகு, குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற கவலையின் காரணமாக அந்நாட்டு அரசு அவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் பாகிஸ்தானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒன்றாகும். அங்கு ஏராளமான பாகிஸ்தானிய வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக, துபாய் மற்றும் அபுதாபிக்கு மில்லியன் கணக்கான பாகிஸ்தான் மக்கள் வேலைக்காகப் பயணிக்கின்றனர். குறிப்பாக, ஒவ்வோர் ஆண்டும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவர்கள், 8,00,000க்கும் மேற்பட்ட விசாவிற்கு விண்ணப்பிப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தான் குடிமக்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸை அடைந்த பிறகு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற கவலையின் பேரில், அவர்களுக்கு விசா வழங்குவதை அந்நாடு நிறுத்தியுள்ளது. மனித உரிமைகள் தொடர்பான செனட் செயல்பாட்டுக் குழுவின் கூட்டத்தின்போது இந்த வெளிப்பாடு தெரிய வந்தது. பாகிஸ்தானியர்கள் பிச்சை எடுப்பது அல்லது போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் மற்றும் வெளிநாடுகளில் பிற குற்றங்களில் ஈடுபட்டிருப்பது போன்ற வழக்குகளின் எண்ணிக்கையில் ஆபத்தான அதிகரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்துள்ளது.

pak. passport

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முடிவு, பாகிஸ்தானிய குடிமக்களுக்கான சுற்றுலா, வருகை மற்றும் பணி அனுமதிகள் உட்பட அனைத்து வகை விசாக்களையும் பாதிக்கிறது. தற்போதுள்ள விசாக்கள் காலாவதியாகும் வரை செல்லுபடியாகும், ஆனால் புதிய விண்ணப்பங்கள் எதுவும் ஐக்கிய அரபு எமிரேட் தூதரகங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட விசா மையங்களிலோ செயல்படுத்தப்படுவதில்லை.

இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டின் பிம்பம் மேலும் சிதைந்துபோகும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அந்நாட்டின் பாஸ்போர்ட், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் நான்காவது மோசமான இடத்தில் உள்ளது குறிப்பிடக்கத்தக்கது. அதேநேரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்போது நீல மற்றும் ராஜதந்திர பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே விசாக்களை வழங்கி வருகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் பல வளைகுடா நாடுகள் பாகிஸ்தானின் குறைந்தது 30 வெவ்வேறு நகரங்களைச் சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதற்கு காலவரையற்ற தடையை விதித்திருந்தன.

UAE

மறுபுறம், சமீபத்திய ஆண்டுகளில், சவுதி அரேபியா 4,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய பிச்சைக்காரர்களை கைது செய்துள்ளது, குறிப்பாக மெக்கா மற்றும் மதீனாவில், உம்ரா மற்றும் ஹஜ் யாத்திரைகளின்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச் செயல்களுக்காக பல பாகிஸ்தானியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், இது கடுமையான விசா பரிசோதனைக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக, பாகிஸ்தானுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே விசா தொடர்பான பிரச்னைகள் பல மாதங்களாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.