சக்திவாய்ந்த பாஸ்போர்ட் | முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறிய அமெரிக்கா.. முன்னேறிய இந்தியா!
2025ஆம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்
பாஸ்போர்ட்டின் சக்தியைத் தீர்மானிப்பதில் சர்வதேச உறவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வலுவான இராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடுகள் பெரும்பாலும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ளன. அவை, தங்கள் குடிமக்களுக்கு மற்ற நாடுகளுக்கு விசா இல்லாத விரிவான அணுகலை வழங்குகின்றன. அந்த வகையில், உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் அளிக்கும் தரவுகளை வைத்து பிரிட்டனைச் சேர்ந்த ஹென்லி பாஸ்போர்ட் நிறுவனம் பட்டியலிடும்.
10 இடங்களில் இருந்து வெளியேறிய அமெரிக்கா
அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. விசா இல்லாமல் பயணிகள் எத்தனை நாடுகளுக்குச் செல்லலாம் என்பதை அளவிடும் சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, அமெரிக்க பாஸ்போர்ட் இப்போது உலகளவில் 12வது இடத்தில் உள்ளது. உலகளவில் 227 இடங்களில் 180 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலுடன் மலேசியாவுடன் அந்த இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த இரண்டு நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் உலகில் உள்ள 227 நாடுகளில் 180 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
முதலிடத்தில் ஆசிய நாடுகள்
கடந்த ஆண்டு, அமெரிக்கா ஏழாவது இடத்தில் இருந்த நிலையில், நடப்பாண்டு ஜூலையில் பத்தாவது இடத்திற்குச் சரிந்தது. 2014இல், அது பட்டியலில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கர்கள் விசா இல்லாமல் 180 இடங்களுக்குள் நுழைய முடியும் என்றாலும், அமெரிக்காவே 46 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாத நுழைவை வழங்குகிறது. ”கடந்த 10 வருடங்களில் அமெரிக்க பாஸ்போர்ட்டின் வலிமை குறைந்து வருவதே தரவரிசையில் ஏற்பட்ட மாற்றத்திற்குக் காரணம்” என ஹென்லி & பார்ட்னர்ஸின் தலைவரும் குறியீட்டை உருவாக்கியவருமான கிறிஸ்டியன் எச். கைலின் தெரிவித்துள்ளார். தரவரிசையில் ஏற்பட்ட சரிவு, ட்ரம்ப் நிர்வாகத்தின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இறுக்கமான அமெரிக்க குடியேற்றம் மற்றும் பயணக் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது.
அதேநேரத்தில், ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் ஆசிய 'டிரிஃபெக்டா' ஆதிக்கம் செலுத்துகிறது. 2025 தரவரிசையில், மூன்று ஆசிய நாடுகள் லீடர்போர்டில் முதலிடத்தில் உள்ளன. 193 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலுடன் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து தென் கொரியா 190 இடங்களுடன் 2வது இடத்திலும், ஜப்பான் 189 இடங்களுடன் 3வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் 188 இடங்களுடன் 4வது இடத்திலும், ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் 187 இடங்களுடன் 5வது இடத்திலும் உள்ளன. கிரீஸ், ஹங்கேரி, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்வீடன் ஆகிய நாடுகள் 186 இடங்களுடன் 6வது இடத்திலும், ஆஸ்திரேலியா, செக் குடியரசு, மால்டா, போலந்து ஆகிய நாடுகள் 185 இடங்களுடன் 7வது இடத்திலும், குரோஷியா, எஸ்டோனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யுகே ஆகிய நாடுகள் 184 இடங்களுடன் 8வது இடத்திலும், கனடா 183 இடங்களுடன் 9வது இடத்திலும், லாட்வியா, லிச்சென்ஸ்டீன் ஆகிய நாடுகள் 182 இடங்களுடன் 10வது இடத்திலும், ஐஸ்லாந்து, லிதுவேனியா ஆகிய நாடுகள் 181 இடங்களுடன், 11வது இடத்திலும் உள்ளன.
2006இல் 71வது இடத்தையும், 2021இல் 90வது இடத்தையும், பிடித்த இந்தியா, இந்த ஆண்டு 85வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். சீனாவின் பாஸ்போர்ட் 2015ஆம் ஆண்டில் 94வது இடத்திலிருந்து 2025ஆம் ஆண்டில் 64 வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இது 76 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 103வது இடத்திலும், வங்கதேசம் 100வது இடத்திலும், நேபாளம் 101வது இடத்திலும், இலங்கை 98வது இடத்திலும் பூட்டான் 92வது இடத்திலும் உள்ளன. ஆப்கானிஸ்தான் உலகின் பலவீனமான பாஸ்போர்ட் உடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் குடிமக்கள் 24 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும்.