மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி புரிந்துவந்த நிலையில் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய கிளர்ச்சியாளர்கள் மெல்லமெல்ல முன்னேறி தற்போது தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றினர். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படையும், சிரியன் தேசிய ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழுவும் இணைந்து அசாத்தின் கால் நூற்றாண்டு ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளன. இதையடுத்து சிரியாவில் 13 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் 13 ஆண்டுகளாக பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராகப் போரிட்டனர். ஆனால், அவரை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற முடியவில்லை. ஆனால், அதே 13 நாட்களுக்குள் அல்-அசாத்தின் ஐந்து தசாப்த கால குடும்ப ஆட்சியை அகற்றியதே தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. ஆம், இந்த 13 நாளில் அசாத்தின் ஆட்சி கவிழ்ந்தது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம். நவம்பர் 27ஆம் தேதி ஆரம்பித்த இந்தப் போர் நேற்றே (டிசம்பர் 8) முடிவுக்கு வந்தது ஆச்சர்யமானது; பேசுபொருளானது.
1. மக்களின் எதிர்பார்ப்பு
இதற்கு முக்கியக் காரணம், அசாத் ஆட்சி விரைவிலேயே கவிழும் என கிளர்ச்சியாளர்கள் நம்பினர். மக்களும் அதை எதிர்பார்த்தனர்.
2. உக்ரைன் போர்
அடுத்து அசாத், கடந்த காலங்களில் ரஷ்யா மற்றும் ஈரான் உதவிகளைப் பெற்று கிளர்ச்சிப் படைகளை முறியடித்து வந்தார். ஆனால், இந்த முறை ரஷ்யா - உக்ரைனில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் போர் தொடுத்து வருகிறது.
3. இஸ்ரேல் - ஈரான் மோதல்
ஈரானும் இஸ்ரேல் மீது அவ்வப்போது போரிட்டது. தவிர, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக இயங்கி வருகிறது. இதன் காரணமாகவே, சிரியா அரசுக்கு அந்த நாடுகளின் ஆதரவு குறைந்தது. மேலும் இந்தப் போரின் போது பல தலைவர்களையும் தளபதிகளையும் ஈரான் அரசு இழந்தது. இதுவே, அந்த நாட்டுக்கு பல இழப்பீட்டைத் தந்தது.
4. ட்ரம்பின் அறிவிப்பு
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ட்ரம்பின் அறிவிப்பால் அமெரிக்காவும் இந்த விஷயத்தில் மவுனம் காத்துவிட்டது. இதற்கிடையே இஸ்ரேல் - லெபனானில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டபிறகு, சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபடத் தொடங்கினர்.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்ட அவர்கள், தீவிரமாய்ச் செயலாற்றினர். இதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.
5. வெடித்த ஊழல் பிரச்னை!
ஊழல் பிரச்னைகளால் சிரிய அரசுக்குள்ளேயே பிரச்னை வெடித்தது. இதனால் விமானம் மற்றும் டாங்கிகளில் எரிபொருள் நிரப்பப்படாமல் இருந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம், அரசுக்கு எதிராக பல மக்கள் போரிட விரும்பாமல் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதையெல்லாம் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது கிளர்ச்சிப் படைகள். இந்த அரசைக் கவிழ்ப்பதற்கு முழு மூளையாகச் செயல்பட்டவர் இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படையின் ஜோலானிதான். அவர் கொடுத்த ஆலோசனைகளும் வழிகாட்டிகளுமே இந்த வெற்றிக்கு வித்திட்டதாகக் கூறப்படுகிறது. இதைவிட இன்னொரு அதிர்ஷ்டமும் கிளர்ச்சியாளர்களுக்கு கைகூடியிர்க்கிறது. ஆம், அவ்வப்போது இஸ்ரேல் போர் விமானங்கள் சிரியாவில் உள்ள பல இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தின. அதன்மூலம் கிடைத்த ஆயுதங்களை கிளர்ச்சியாளர் எடுத்துப் பயன்படுத்திக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாத் ஆட்சியை வீழ்த்துவதில் இஸ்ரேலின் பெரும் பங்கு முக்கியத்தும் வாய்ந்தது. அந்த ஆட்சி வீழ்ந்தவுடன் முதலில் வாழ்த்து தெரிவித்தவர் இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுதான். இப்படித்தான் கடந்த 13 நாட்களில் ஜோலானி தலைமையிலான கிளர்ச்சிப் படை அசாத் ஆட்சியை கவிழ்த்து வெற்றிபெற்றுள்ளது.