பாலன் ஷா தலைமையிலான அரசாங்கம் சமீபத்தில் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் சங்கங்களை கலைக்க அல்லது தடை செய்ய எடுத்த முடிவு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மாணவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகக் கூறி மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இன்னொரு புறம், இந்தியாவிலிருந்து தனிநபர்கள் கொண்டு வரும் ரூ.100-க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களுக்கு கட்டாய சுங்க வரி விதிக்கும் புதிய உத்தரவு சாமானிய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
நேபாளத்தில் கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், காத்மாண்டு முன்னாள் மேயரும் ராப் பாடகருமான பாலன் ஷா (பாலேந்திர ஷா) வெற்றிபெற்று பிரதமரானார். இந்த நிலையில், பதவியேற்ற (மார்ச் 27) சில வாரங்களிலேயே, மாணவர் சங்கத் தடைக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இது, அவருக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டியுள்ளது. பாலன் ஷா தலைமையிலான அரசாங்கம் சமீபத்தில் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் சங்கங்களை கலைக்க அல்லது தடை செய்ய எடுத்த முடிவு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களை நியமிப்பதிலும், நிர்வாக முடிவுகளிலும் மாணவர் சங்கங்கள் அநாவசியமாகத் தலையிடுவதாகப் புகார்கள் உள்ளன.
சில நேரங்களில் இந்தச் சங்கங்களுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் வன்முறையில் முடிவதும், பல்கலைக்கழகச் சொத்துக்கள் சேதமடைவதும் இந்தத் தடை முடிவுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. நேபாளத்தின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் நீண்டகாலமாக அரசியல் கட்சிகளின் பிடியில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு பெரிய அரசியல் கட்சிக்கும் ஒரு மாணவர் பிரிவு உண்டு. இது கல்விச் சூழலைச் சீர்குலைப்பதாகவும், வகுப்புகளைவிட அரசியல் கூட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் பாலன் ஷா கருதுகிறார். மாணவர் சங்கங்கள் அடிக்கடி நடத்தும் போராட்டங்கள் மற்றும் வகுப்பறைப் புறக்கணிப்புகள் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதாக அவர் வாதிடுகிறார். இதனால், மாணவர்களைக் கட்சி அரசியலில் இருந்து விடுவித்து, அவர்களைத் தொழில்முறைத் திறன் கொண்டவர்களாக மாற்றுவதே தனது நோக்கம் என அவர் கூறுகிறார்.
இதன் காரணமாகவே அவர் மாணவர் சங்கங்களை கலைக்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முடிவிற்கு மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இது மாணவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகக் கூறி மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். "மாணவர் சங்கங்கள் என்பது மாணவர்களின் குறைகளைக் கேட்கும் ஒரு ஜனநாயக மேடை. அதைத் தடுப்பது கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் செயல். மாணவர் பருவம் முதலே அரசியலில் ஈடுபடுவதுதான் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும். அதைத் தடுப்பது இளைஞர்களின் அரசியல் ஆர்வத்தைக் குறைக்கும்” என அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்தியாவிலிருந்து தனிநபர்கள் கொண்டு வரும் ரூ.100-க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களுக்கு கட்டாய சுங்க வரி விதிக்கும் புதிய உத்தரவு சாமானிய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களையும் இது நேரடியாகப் பாதித்துள்ளது. இன்னொரு புறம், வருமானத்திற்கு அதிகமாக சொத்து வைத்திருப்பதாகவும், சந்தேகத்திற்கிடமான நிதிப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் சூடான் குருங்கிற்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் இந்தப் போராட்டங்கள் மையப்படுத்தியுள்ளன.
இதனால், நேபாளத்தில் தெருக்களில் இருந்து நாட்டின் நிர்வாக மையமான சிங்கா தர்பார் வரை போராட்டங்கள் பரவியுள்ளன. மாணவர்கள், அரசியல் குழுக்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் காத்மாண்டு மற்றும் பிற நகரங்கள் முழுவதும் வீதிகளில் இறங்கியுள்ளனர். 2025-இல் நடந்த 'Gen Z' போராட்டங்கள் மூலம் பழைய அரசியல் தலைவர்கள் தூக்கி எறியப்பட்டு பாலன் ஷா ஆட்சிக்கு வந்தாலும், தற்போதைய நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் பழைய அரசியல் கட்சிகளின் தூண்டுதல்களும் இந்தப் போராட்டங்களுக்கு ஒரு காரணமாகக் கருதப்படுகின்றன. போராட்டங்களின் தீவிரம் அதிகரித்து வருவதால் பாலன் ஷா அரசாங்கம் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.