நேபாளம் | புதிய பிரதமர் பதவியேற்ற ஒரே நாளில் அதிரடி.. கே.பி. சர்மா ஒலி கைது!
2025 செப்டம்பரில் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்ததாலும், அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக எழுந்த புகாராலும் அதிருப்தியடைந்த இளைஞர்கள் வீதிகளில் போராடினர். நாடாளுமன்ற வளாகம், பிரதமர் அலுவலகம், அதிபர் மாளிகை, அரசுக் கட்டடங்கள் ஆகியவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்த நிலையில், போராட்டக் குழுவினர் மீது நேபாள ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, போராட்டம் அதிகரித்த நிலையில் பிரதமர், அமைச்சர்கள் ராஜினாமா செய்ததுடன், முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கினர். தொடர்ந்து, செப்டம்பர் 9- ஆம் தேதி கே.பி சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி பதவியேற்றார். 2026 மார்ச் 5-ல் தேர்தல் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மார்ச் 5- ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 35 வயதேயான பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய சுதந்திரக் கட்சி மொத்தம் உள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன்மூலம், ராப் பாடகரும் முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா நேபாளத்தின் 47-வது பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்த சூழலில் தான், அவர் பதவியேற்றுக் கொண்ட அடுத்த நாளே நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி சர்மா ஒலி இன்று காலை பக்தாபூர் மாவட்டம் குண்டுவில் உள்ள அவரது கைது செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து, முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக்கையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் 70-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்குக்காகவே கேபி சர்மா ஒலி கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கைது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி ‘சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வோம்’ எனத் தெரிவித்திருக்கிறார். நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றுக் கொண்ட அடுத்த நாளே முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டிருப்பது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

