israel - iran attack afp
உலகம்

ஈரான் - இஸ்ரேல் திடீர் தாக்குதல் | பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவத் தளவாடங்கள், உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவை மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.

Prakash J

இஸ்ரேல் - ஈரான் திடீர் தாக்குதல்

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் இன்றுவரை போர் தொடுத்து வருகிறது. மறுபுறம், காஸாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவத் தளவாடங்கள், உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவை மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.

இஸ்ரேல் தாக்குதல்

இது தொடரும் எனவும் அது எச்சரித்துள்ளது. அதன்படி, சமீபத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஈரான் முழுவதும் 200 ட்ரோன்களை இஸ்ரேல் ராணுவம் வீசியதாகக் கூறப்பட்டது. இதில் ஈரான் ஆயுதப்படைத் தலைமைத் தளபதி முகமது பகேரி மற்றும் மூத்த புரட்சிகர காவல்படை தளபதி கோலம் அலி ரஷீத், அணு விஞ்ஞானிகள் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி மற்றும் ஃபெரேடவுன் அப்பாசி ஆகியோர் கொல்லப்பட்டனர். இதை, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் மூத்த தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்திருந்தார். அவர், “இதன்மூலம், இஸ்ரேல் ஒரு கசப்பான மற்றும் வேதனையான தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. மேலும் அது நிச்சயமாக அதைப் பெறும்" என எச்சரித்திருந்தார்.

தாக்குதலின் பின்னணியில் இருப்பது என்ன?

அதேபோல் ஈரானின் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்ட பிறகு அந்த அமைப்பும் இஸ்ரேலைப் பழிவாங்குவதாக சபதம் செய்துள்ளது. "இந்தத் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கப்படாது. ஆனால், இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகம், "அமெரிக்காவின் ஒருங்கிணைப்பு மற்றும் அனுமதி இல்லாமல் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலைத் தொடுத்திருக்க முடியாது. இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்காவே பொறுப்பு" எனத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்

இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 100 ட்ரோன்களை ஏவியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின், "ஈரான் இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி சுமார் 100 ட்ரோனகளை ஏவியது. அவற்றை இடைமறித்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்புப் பற்றிப் பேசப்படுகிறது. சமீபத்திய இஸ்ரேலிய உளவுத் துறை தகவல்கள்படி, ஈரான் அதிகளவில் யுரேனியத்தைச் சேமித்து அணு ஆயுதங்களைக் குறுகிய காலத்திற்குள் தயாரிக்க முன்வருவதாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே ஈரானின் அணு ஆயுத நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்கியதாகவும், இதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு நல்கியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது என அமெரிக்கா வலியுறுத்தி வருவதுடன், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வரும்படியும் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், இஸ்ரேல் - ஈரான் திடீர் தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகளில் அதிர்ச்சி அலை எழுந்துள்ளது. தவிர, எண்ணெய் விலையும் 12 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.