ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்த இஸ்ரேல்... அதிகரிக்கும் பதற்றம்!
பல ஆண்டுகளாக, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அந்த அமைப்புகளை குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க அரசு கடந்த சில நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியையே தழுவியது.
இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தி தளம், அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் இன்று வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும், ஈரானின் ராணுவ முகாம்கள் மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக தெரிவித்துள்ள, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "Operation Rising Lion என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது; இஸ்ரேலின் உயிர்வாழ்விற்காக ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்க தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கை எங்கள் துணிச்சலான விமானிகள் ஈரான் முழுவதும் உள்ள இலக்குகளை தாக்குகின்றனர்; இப்போது செயல்படவில்லை எனில் நாங்கள் இங்கே இருக்கமாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தெரிவிப்பது என்ன?
இதற்கிடையில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவு வருகிறது.
முன்னதாக, ஈரானில் அணு ஆயுதங்கள் உள்ள இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க உளவுத்துறை சந்தேகம் தெரிவித்து வந்தது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் அது ஆபத்தாக மாறும் என டிரம்ப் கவலை தெரிவித்து வந்தார். இந்தநிலையில்தான்,இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
விமான சேவைகள் பாதிப்பு
மேலும், ஈரானில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. அதேபோல், ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால், இஸ்ரேலும் தனது வான்வெளியை மூடியுள்ளது. இந்த நிலையில், ஈரான், இஸ்ரேல் வழியாக இந்தியாவுக்கு வரும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானங்கள் திரும்பி வருவதாகவும், லண்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தில்லி நோக்கி வரும் விமானங்கள், ஈரான் வான்வெளியை தவிர்த்து மும்பைக்கு மாற்றி அனுப்பப்பட்டிருப்பதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.