அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தம் ரத்தானதிலிருந்து, CENTCOM தகவலின்படி ஈரானின் கடலோர, வான் பாதுகாப்பு, இராணுவத் தளவாடங்கள் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை தொடர்கிறது. அதட்நேரம், ஈரானில் ‘பழிவாங்கும் கடல்’ சுவரோவியத்தில் ட்ரம்ப், நெதன்யாகு இருவரும் ரத்தக் கடலில் மூழ்கும் காட்சியுடன், பாரசீகம்-ஆங்கில வாசகங்கள் மூலம் ஈரான் உளவியல் தகவல் போராட்டத்தை தீவிரப்படுத்துகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையே நிலவிய நிலையற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த வாரம் ரத்தானதில் இருந்து, ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடலோரக் கண்காணிப்பு மற்றும் வான் பாதுகாப்புத் தளங்கள், இராணுவத் தளவாடக் கட்டமைப்பு மற்றும் கடல்சார் செயல்பாட்டுத் திறன்கள் போன்ற ஈரானின் டஜன் கணக்கான இராணுவ இலக்குகளைக் குறிவைத்து, போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்காவின் CENTCOM கூறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் ரத்தச் சிவப்பு நிறத்திலான ‘பழிவாங்கும் கடலில்’ (Sea of Revenge) மூழ்கித் தவிப்பது போன்ற புதிய ஆக்ரோஷமான பிரம்மாண்ட சுவரோவியம் (Mural) ஒன்றை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு அரசு வைத்துள்ளது. ஈரானியப் புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய ‘தஸ்னிம்’ (Tasnim) செய்தி நிறுவனம் இந்தப் பதாகை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
மத்திய டெஹ்ரான் பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாணட சுவர் ஓவியத்தில், ’ஈரானிய தேசத்தின் பழிவாங்கும் கடலில் நீங்கள் இருவரும் மூழ்கிப் போவீர்கள்’ என்று பாரசீகம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.
இது மட்டுமன்றி, கடந்த சில தினங்களுக்கு முன் ஈரான் தனது முக்கிய இடமான எங்கெலாப் சதுக்கத்தில் திறந்த கருப்புச் சவப்பெட்டியில் ட்ரம்ப் படுத்திருப்பது போன்ற.பிரம்மாணட விளம்பரப்பலகையை வைத்திருந்தது. அதில் ட்ரம்பின் கண்கள் மூடிய நிலையிலும், கலைந்த தலைமுடியுடனும் படுத்திருப்பது போலவும் நாங்கள் ட்ரம்பைக் கொல்வோம்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. விளம்பரப் பலகையின் கீழே, ’மினாபின் குழந்தைகளின் நினைவாக’ என்றும் எழுதப்பட்டுள்ளது. இது, மோதலினபோது ஈரானிய நகரமான மினாபில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இறந்த குழந்தைகளை குறிக்கிறது
மேலும் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் திடீர் மரணத்திற்குப் பிறகு, அடுத்த இலக்கு யார்? என்ற வாசகத்துடன் ‘D’ மற்றும் ‘T’ ஆகிய ஆங்கில எழுத்துகளை மட்டும் கோடிட்டுக் காட்டி (Donald Trump-ஐக் குறிக்கும் வகையில்) மற்றொரு பதாகையையும் ஈரானின் வாலியாஸ்ர் சதுக்கத்தில் ஈரான் வைத்திருந்தது.
ஈரானின் இந்தத் தொடர் விளம்பரப் பரப்புரைகள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா தீவிரத் தாக்குதலை நடத்திவரும் நிலையில் போரை எதிர்கொள்ளத் தங்களின் மக்களும் ராணுவமும் தயார் நிலையில் இருப்பதை உலகிற்கு உணர்த்தவே ஈரான் இத்தகைய ஆக்ரோஷமான சுவரோவியங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதாக பார்க்கப்படுகிறது.
முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் நல்லடக்கத்திற்கு பின் அமெரிக்காவுடன் தொடரும் இராணுவ மோதலால், ஈரான் மேற்கொள்ளும் பரந்த உளவியல் ரீதியான தகவல் பரிமாற்றப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த விளம்பரப் பலகைகள் தோன்றுகின்றன.
அதிபர் ட்ரம்ப்பைக் கொல்ல ஈரான் தொடர்ந்து விடுத்தவரும் அச்சுறுத்தல்கள், தங்கள் வலிமையையும் ஒற்றுமையையும் குடிமக்களுக்குக் காட்ட ஈரான் அரசு, பொது இடங்களில் இவ்வாறு பிரசாரம் செய்கிறது. அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் தலைவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படும்படியும், அச்சம் கொள்ளும்படியும் செய்வதே இதன் நோக்கமாகும்.
இவ்வாறு, இந்தப் பிரம்மாண்ட விளம்பரப் பலகைகளில் இடம்பெறுவது வெறும் விளம்பரம் மட்டும் அல்ல. பொது இடத்தைத் தகவல்-போரின் மேடையாக மாற்றும் அரசியல் உத்தியாக பார்க்கப்ப்டுகிறது .