விரிவடையும் மோதல்.. நெதன்யாகுவை விளாசிய அமெரிக்கா.. அதிர்ச்சிப் பின்னணி?
ஈரான்-அமெரிக்கா போர், ஹார்முஸ் நீரிணை மூடல், உலகப் பொருளாதார அதிர்ச்சி ஆகிய பின்னணியில், இஸ்ரேல் பங்கேற்காத அமைதி ஒப்பந்தம் அமெரிக்கா-ஈரான் இடையே கையெழுத்தானது. இதைத் தகர்க்க இஸ்ரேல் பிரசாரம், பணச் செலவுகள் செய்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கடுமையாக குற்றம்சாட்டி, நெதன்யாகு அணியை ’Go to hell’ எனத் திட்டியிருப்பது மோதலைத் தீவிரப்படுத்துகிறது.
செய்தியாளர் ; M. மீரா
பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீதான போரை அமெரிக்கா - இஸ்ரேல் துவக்கியது. தீவிரமடைந்த போரால் உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் முக்கியமான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. தொடர்ந்து உலகளவில் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதால் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் ஜூன் 17ஆம் தேதி அமெரிக்காவும் ஈரானும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்திற்காக நடைபெற்ற எந்தப் பேச்சுவார்த்தையிலும் இஸ்ரேல் பங்கேற்கவில்லை.
ஈரானுடன் ரகசிய அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியபோது அதில் ஈடுபட்ட உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள், நகர்வுகளை இஸ்ரேல் உளவு பார்த்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டியிருந்தது.
இவ்வாறு அமெரிக்கா - இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. மேலும் ஒரு தருணத்தில், ”உங்கள் நாட்டுப் பிரச்னையை தீர்க்க வெறும் கொலை செய்வது மட்டும் தீர்வல்ல” என இஸ்ரேலை கடுமையாக விமர்சித்திருந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்.
அமெரிக்காவின் இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவை இஸ்ரேல் தலைவர்கள் சரியாக மதிக்கத் தவறுகின்றனர் என்றும், இதனால் இஸ்ரேல் உலகளவில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் மற்றொரு தருணத்தில் வான்ஸ் பகிரங்கமாக விமர்சித்திருந்தார். உலகில் எஞ்சியிருக்கும் ஒரே பலமான கூட்டாளியை எதிர்க்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் ஜே.டி.வான்ஸ்.
பின்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தானது என்று கூறியதைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் போர் தீவிரமடைந்தது. இந்நிலையில் ஜோ ரோகனின் (Joe rogan Experience) பாட்காஸ்டில் பேசிய ஜே.டி.வான்ஸ் ஈரானுடனான எங்கள் பேச்சுவார்த்தைகளை முறியடிக்கவும், ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயன்ற எங்களின் நற்பெயரைக் கெடுக்கவும் இஸ்ரேல் பெருமளவிலான பணத்தைச் செலவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
நெதன்யாகுவின் அமைப்புக்குள் இருக்கும் சில நபர்கள், போரை காலவரையின்றித் தொடரவைப்பதற்காக அமெரிக்க பொதுமக்களின் கருத்தைத் திரித்து, மாற்ற முயற்சிக்கிறார்கள் என்பது நமக்கு எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றித் தெரியும். எந்தவொரு நோக்கமும் இல்லாமல் காலவரையின்றி போரைத் தொடரவைக்கவே இஸ்ரேல் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ஜேடி வான்ஸ்.
அந்தப் பிரசாரத்தின் பின்னணியில் இருப்பவர்களை ’Go to hell’ என்று கூறியதுடன், அமெரிக்க மக்களுக்குத் தேவையானதை, சரியானதை நான் தொடர்ந்து செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். வான்ஸின் இந்தக் கருத்துகள், வாஷிங்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பகிரங்கமாக அதிகரித்துவரும் கருத்து வேறுபாடுகளை மேலும் தீவிரப்படுத்துவதைக் காட்டுகிறது.

