வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு ஹில்சா (Ilish) மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக துர்கா பூஜைக் காலத்தில் வங்கதேசத்தில் இருந்துதான் இந்தியாவுக்கு ஹில்சா மீன்கள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், தற்போது இந்த வர்த்தக நடைமுறை தலைகீழாக மாறியுள்ளது.
இந்தியாவில் கொண்டாடப்படும் துர்கா பூஜையின்போது ஹில்சா மீன் உணவு முக்கிய அங்கம் வகிக்கிறது. துர்கை வழிபாடு, வீதி உலா என்ற பாரம்பரியத்துடன் ஹில்சா மீனையும் சேர்த்தாக வேண்டும். குறிப்பாக, துர்கா பூஜையின்போது மீன்கள், இறைச்சி உணவைப் படையில் இடுவதும் அதை உண்பதும் வங்காளிகளின் கலாசாரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஹில்சா மீன் வங்காள மக்களின் கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்று என்பதும் நவராத்திரி பண்டிகைக்காலத்தில் ஹில்சா மீன்கள் மிக அதிகளவு பயன்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக, ஆண்டுதோறும் வங்கதேசத்திலிருந்து ஹில்சா மீன்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவது உண்டு. வங்கதேசத்தில் உள்ள பத்மா உள்ளிட்ட ஆறுகளிலும், அந்நாட்டை ஒட்டிய வங்காள விரிகுடா கடலிலும், ஹில்சா வகை மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. கங்கை நதியிலும் ஹில்சா மீன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில், தங்கள் நாட்டில் தாராளமாகக் கிடைக்கும் ஹில்சா மீன்களை, தனது தொப்புள் கொடி உறவான மேற்கு வங்கத்துக்குப் பரிசாக வழங்குகிறது வங்கதேச அரசு.
அந்நாட்டிலிருந்து இந்தியாதான் ஹில்சா மீன்களை இறக்குமதி செய்து வந்த நிலையில், தற்போது முதன்முறையாக அம்மீன்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. வங்கதேசத்திற்கு 500 டன் ஹில்சா மீன்களை கடந்த 2 மாதத்தில் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. வரும் வாரங்களில் மேலும் 150 முதல் 200 டன் வரை அனுப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக வங்கதேசத்தில் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் போதிய ஹில்சா மீன்கள் உற்பத்தியாகாததால் குஜராத்திலிருந்து அது வங்கதேசத்திற்கு அனுப்பப்படுகிறது. குஜராத் ஹில்சா மீன்களில் சினை (முட்டை - Roe) அதிகளவில் இருக்கும். இந்தியாவில் இதற்கான தேவை குறைவு என்றாலும், வங்கதேசத்தின் சிட்டகாங் மற்றும் சில்ஹெட் பிராந்தியங்களில் சினை நிறைந்த ஹில்சா மீன்களுக்குக் கடும் தேவை நிலவுகிறது.