hamas secret tunnel
hamas secret tunnel file image
உலகம்

உலகை உலுக்கும் ஹமாஸின் ரகசிய சுரங்கம்! 100 அடிக்கு கீழே.. இவ்வளவு தூரமா??

யுவபுருஷ்

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் படைக்குழுவின் மர்ம சுரங்கம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உலக மக்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. என்னதான் வான்வழி தாக்குதல், கடல்வழி தாக்குதல், தரைவழி தாக்குதல் என்று கேள்விப்பட்டிருந்தாலும், நிலக்கீழ் தாக்குதல் அதாவது சுரங்கம் மூலம் தாக்குதல் நடத்துவது எதிரி படையை துவம்சம் செய்யும் யுத்தியாக இருக்கிறது. இந்நிலையில், ஹமாஸின் மர்ம சுரங்கம் குறித்த முக்கிய கூறுகளை அலச முனைகிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

ஒரு காலத்தில் காஸாவில் கடத்தல் தொழிலுக்காக பயன்படுத்தப்பட்ட சுரங்கங்கள் 2007ல் காஸா, ஹமாஸ் கட்டுப்பாட்டில் வந்த பிறகு நிலக்கீழ் யுத்த சுரங்கமாக மாற்றப்பட்டதாக தெரிகிறது. கடந்த 2021ம் ஆண்டு, “ஹமாஸின் 100 கிலோமீட்டர் நீளம் கொண்ட சுரங்கத்தை நாங்கள் அழித்துவிட்டோம்” என்று கர்ஜித்தது இஸ்ரேல் பாதுகாப்புப் படை. ஆனால் இதற்கு பதிலடி கொடுத்த ஹமாஸ், “நீங்கள் அழித்தது வெறும் 5 சதவீதமான சுரங்கத்தைத்தான். எங்கள் சுரங்க உறைவிடம் மொத்தமாக 500 கிலோமீட்டர் நீளம் கொண்டது” என்று தெரிவித்தனர். இந்த தகவல் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது.

காஸாவில் பொதுமக்களின் கட்டடங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்களை இஸ்ரேல் குறிவைத்து தாக்குகிறது என்ற குற்றச்சாட்டு எழும் நிலையில், இதற்கு கீழ்தான் ஹமாஸின் சுரங்கம் இருக்கிறது. அதைத்தான் தாக்குகிறோம் என்று வாதிடுகிறது இஸ்ரேல் படை.

கடந்த 7ம் தேதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தொடுத்த அதிரடி தாக்குதலிலும் இந்த சுரங்கம் முக்கிய பங்கு வகித்ததாக தெரிகிறது. எகிப்து முதல் இஸ்ரேல் வரை நீண்டு கிடக்கும் இந்த சுரங்கத்தால், இஸ்ரேலுக்குள்ளும் ஊடுறுவி தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

ஒருகாலத்தில் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட சுரங்கங்கள் தற்போது கட்டுப்பாட்டு அறை, போர் ஆலோசனைகள், ஆயுத கிடங்கு போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும் அதிநவீன சுரங்கமாக மாறியிருக்கிறது. ஹமாஸ் படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட இஸ்ரேல் கைதிகளும் இந்த சுரங்க உறைவிடத்தில்தான் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இத்தனை ரகசியங்களை வைத்திருக்கும் ஹமாஸின் சுரங்கப்பாதை உண்மையில் எவ்வளவு நீளம், அகலம் போன்றவை எல்லாம் சர்வதேச உளவு அமைப்பிற்கே தெரியாத புதிராக இருந்து வருகிறது என்பதுதான் நிதர்சனம்.