What happened to Kim Jong Un Reuters
உலகம்

என்ன ஆனது கிம் ஜாங் உன்னுக்கு? அதிகாரத்தை கையிலெடுத்த பெண் தலைவர்? முக்கிய தகவலை வெளியிட்ட வடகொரியா!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அது குறித்து வடகொரியா முக்கிய தகவலை பகிர்ந்துள்ளது.

Praveen Joshva L

கிம் ஜாங் உன் உயிரிழந்ததாக பரவிய வதந்திகளை மறுத்து, அவர் பியாங்யாங்கில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற புகைப்படங்களை வடகொரியா வெளியிட்டது.

கடந்த இரு நாட்களாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தீவிர உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் உயிரிழந்துவிட்டார் என இணையத்திலும் சில செய்தி ஊடகங்களிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. அதிபருக்குப் பதிலாக அவரது சகோதரியும் சக்திவாய்ந்த தலைவருமான கிம் யோ ஜாங் (Kim Yo-jong) வட கொரியாவின் ஆட்சி மற்றும் அதிகாரப் பொறுப்புகளைக் கைப்பற்றி வழிநடத்துவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

தென் கொரிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட இந்த கருத்து அடுத்த சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் பரவின. அதிலும், வட கொரியாவில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மையைக் கையாளவும், எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சுமார் 9,000 சீன ராணுவ வீரர்கள் வட கொரியாவிற்குள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

kim jong un & Kim Yo Jong

ஆனால், இந்த வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் வட கொரியாவின் அரசு ஊடகமான KCNA வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொதுநிகழ்ச்சி ஒன்றில் நேரில் கலந்துகொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

KCNA வெளியிட்ட செய்தியில் வட கொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற தேசிய ஆடை மற்றும் காலணி கண்காட்சியை அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும், அங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஆடை வடிவமைப்புகளைப் பார்வையிட்டபடி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Kim and his daughter at the expo

சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நாடாக வடகொரியா உள்ளது. இதன் காரணமாக இதற்கு முன்னர் பலமுறை வடகொரியா பற்றிய உறுதிபடுத்தப்படாத தகவல்கள் பல்வேறு செய்தி நிறுவனங்களிலும் வெளியாகியுள்ளன. அதே போல இதற்கு முன்னர் பலமுறை கிம் ஜாங் உன் இறந்து விட்டதாகவும், அவரது சகோதரி ஆட்சியை கைப்பற்றியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.