\
Shares of Dell have fallen by approximately 1.90 lakh crore
Shares of Dell have fallen by approximately 1.90 lakh croreReuters

ஒரே நாளில் 1.90 லட்சம் கோடி இழப்பு : என்ன ஆனது DELL நிறுவனத்துக்கு ?

டெல் நிறுவன பங்குகள் ஒரே நாளில் இந்திய மதிப்பில் சுமார் 1.90 லட்சம் கோடி அளவு சரிந்துள்ளது.
Published on: 
Summary

டெல் நிறுவன பங்குகள் ஒரே நாளில் 1.90 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது. AI தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்க்லேஸ் வங்கியின் பங்குப் பரிந்துரைத் தரம் குறைப்பது இதற்கான முக்கிய காரணமாக அமைந்தது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உலகப் புகழ்பெற்ற முன்னணி பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனமான டெல் (DELL) நிறுவனம் கணினித் தயாரிப்பு, தரவுச் சேமிப்பு (Data Storage), சேவையகங்கள் (Servers) மற்றும் ஐடி உள்கட்டமைப்பு ஆகியவற்றில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இதன் நிறுவனரான மைக்கேல் டெல் (Michael Saul Dell) உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில், இவரின் டெல் நிறுவன பங்குகள் ஒரே நாளில் 20 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.90 லட்சம் கோடி அளவு சரிந்துள்ளது. இதன் காரணமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு மைக்கேல் டெல் சரிந்துள்ளார்.

Reuters

டெல் நிறுவனம் தரவு மையங்கள் (Data Centers) மற்றும் AI சேவை (AI Servers) தயாரிப்பில் பெருமளவு முதலீடு செய்து வருகிறது. ஆனால், நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்திற்குச் செய்யும் அதிகபட்ச முதலீடுகளின் லாபம் மற்றும் வளர்ச்சி எதிர்பார்க்கும் வேகத்தில் கிடைக்காமல் போகலாம் என்று எச்சரிக்கைகள் வெளியாகின.

அதோடு உலகின் மிகப்பெரிய நிதி சேவை நிறுவனமான பார்க்லேஸ் வங்கி (Barclays) டெல் நிறுவனத்தின் பங்குப் பரிந்துரைத் தரத்தை 'Overweight'-இல் இருந்து 'Equal Weight' ஆகக் குறைத்தது. இதன் காரணமாக நேற்று அமெரிக்க பங்கு சந்தையில் டெல் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் சுமார் 11.6% வரை சரிவைச் சந்தித்தன.

Reuters

2026-ஆம் ஆண்டில் முதல் அரையாண்டில் டெல் நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டிருந்தது. இதனால் அதில் முதலீடுகள் குவிந்த நிலையில், AI துறையின் எதிர்கால வளர்ச்சி மற்றும் லாபத்தன்மை குறித்துப் பங்குச் சந்தை ஆய்வாளர்கள் எழுப்பிய சந்தேகங்கள் ஒரே நாளில் டெல் நிறுவனத்தின் பில்லியன் டாலர் சரிவுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

முதலீட்டாளர்களின் அச்சத்தைப் போக்க, AI பிரிவில் தங்களுக்கு அதிக முதலீடு கிடைத்துள்ளதாகவும், பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசுகளுக்கான பிரத்யேக AI தொழிற்சாலைகளை உருவாக்கும் ஒப்பந்தங்களைக் கைப்பற்றியதாகவும் டெல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து டெல் நிறுவன பங்குகளின் விலை அடுத்த நாள் சற்றே உயர்வை கண்டுள்ளது.

Shares of Dell have fallen by approximately 1.90 lakh crore
உணவுக்காக மகளையே விற்கும் கொடுமை: அதிர்ந்து போன உலக நாடுகள்|அமெரிக்காவின் முடிவால் மாறிய வாழ்க்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com