trump x page
உலகம்

ட்ரம்ப் வரிவிதிப்பு | பங்குச்சந்தை சரிவு.. எச்சரிக்கும் வல்லுநர்கள்.. கறுப்புத் திங்கள் என்பது யாது?

ட்ரம்ப் தொடங்கியுள்ள இந்த வர்த்தகப் போரால் வாரத்தின் தொடங்க நாளான இன்று (ஏப்.4) சர்வதேச பங்குச்சந்தைகளில் கடுமையான தாக்கம் ஏற்படும் என பங்குச்சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Prakash J

அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தினார். இதன்படி இந்தியப் பொருள்களுக்கும் 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தவிர சீனா, கம்போடியா, வியட்நாம், மியான்மர், இலங்கை, வங்கதேசம், செர்பியா, தாய்லாந்து, சீனா, தைவான், பாகிஸ்தான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு 10% வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகப் போர் மூளும் அபாயம்

ட்ரம்பின் இந்த வரி விதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயமும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொருளதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தவிர, சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. எலான் மஸ்க் உள்ளிட்ட உலகின் முதல் 500 பணக்காரர்கள் ஒட்டுமொத்தமாக 208 பில்லியன் டாலர்களை இழந்துள்ளனர்.

trump

இந்த நிலையில், ட்ரம்ப் தொடங்கியுள்ள இந்த வர்த்தகப் போரால் வாரத்தின் தொடங்க நாளான இன்று (ஏப்.4) சர்வதேச பங்குச்சந்தைகளில் கடுமையான தாக்கம் ஏற்படும் என பங்குச்சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். கடந்த 1987, அக்டோபர் 19ஆம் தேதி உலகளவில் வாரத்தின் தொடக்கத்தில் பங்குச்சந்தைகள் சரிவால் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டது. இது ’கறுப்புத் திங்கள்’ (Black Monday) எனக் குறிப்பிடப்படுகிறது.

”பொருளாதர மந்தநிலைக்கு வழிவகுக்கும்”

இந்த நிலையில் சுமார் 37 வருடங்கள் கழித்து மீண்டும் இன்று Black Monday நிகழும் என பிரபல பங்குச் சந்தை வல்லுநர் ஜிம் கார்மர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், ”டொனால்டு ட்ரம்ப் விதிகளின்படி செயல்படும் நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் பலன் அளிக்கவில்லை என்றால், 1987 சூழ்நிலை மிகவும் உறுதியானது. ஆனால் இந்தச் சரிவு நிச்சயம் பொருளாதர மந்தநிலைக்கு வழிவகுக்கும் எனக் கூற முடியாது" எனத் தெரிவித்துள்ளார். பங்குச் சந்தை சரிவு காரணமாக Black Monday என்ற ஹேஸ்டேக் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறது.

’கறுப்புத் திங்கள்' என்றால் என்ன?

’கறுப்புத் திங்கள்' என்றும் அழைக்கப்படும் அக்டோபர் 19, 1987 அன்று, டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி (DJIA) ஒரட்நாளில் 22.6% சரிவைக் கண்டது. இந்த நிகழ்வு உலகளாவிய பங்குச் சந்தை சரிவைத் தூண்டியது. கறுப்புத் திங்கள், நிதி வரலாற்றில் மிகவும் மோசமான நாட்களில் ஒன்றாக உறுதிப்படுத்தப்பட்டது. S&P 500 இன்னும் கடுமையான சரிவைச் சந்தித்தது. அதே நாளில் 30% சரிந்தது. இந்த குழப்பம் மாதம் முழுவதும் தொடர்ந்தது. மேலும் 1987 நவம்பர் தொடக்கத்தில், பெரும்பாலான முக்கிய பங்குச் சந்தை குறியீடுகள் அவற்றின் மதிப்பில் 20% க்கும் அதிகமாக இழந்தன.

கறுப்புத் திங்கள்

1987 பங்குச் சந்தை வீழ்ச்சிக்குக் காளைச் சந்தையின் திருத்தம், கணினிமயமாக்கப்பட்ட வர்த்தகம், டிரிபிள் விட்சிங் ஆகியவையே காரணமாக இருந்தன எனக் கண்டறியப்பட்டது. 1987 ஆம் ஆண்டு, அக்டோபர் 16 ஆம் தேதி, சரிவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை, பங்கு விருப்பங்கள், பங்கு குறியீட்டு எதிர்காலங்கள் மற்றும் பங்கு குறியீட்டு விருப்ப ஒப்பந்தங்கள் ஒரே நேரத்தில் காலாவதியாகி, கூட்டாக டிரிபிள் விட்சிங் என்று அழைக்கப்பட்டன. இதன் விளைவாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் கடைசி மணிநேரத்தில் மிக அதிக ஏற்ற இறக்கம் ஏற்பட்டது. இது, டிரிபிள் விட்சிங் என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து வணிக நேரங்களுக்குப் பிந்தைய சந்தைகளில் பெரிய விற்பனை ஏற்பட்டது. இது கறுப்புத் திங்கட்கிழமைக்கு வழிவகுத்தது.