அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத நாடுகளுக்கு 15 முதல் 20% வரை வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். பதில் வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரித்த நிலையில் பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொண்டு தனித்தனியாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. பிரிட்டன், ஜப்பான், ஐரோப்பிய யூனியன், இந்தோனோசியா போன்றவை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
சீனாவுடன்கூட, அமெரிக்கா கடந்த மே மாதம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ஆகஸ்ட் 12 காலக்கெடுவுடன், நிபுணர்களின் கூற்றுப்படி, இது நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் மற்ற நாடுகளுக்கு 15 முதல் 20% வரை வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவுடன் இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் நீண்ட இழுபறியில் உள்ள நிலையில் ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை கவனம் பெறுகிறது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் மூலம் நடத்தப்பட்டபோதிலும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஜூலை 9ஆம் தேதிக்கு முன்னர் இறுதி செய்யப்படும் எனக் கூறப்பட்டது. இது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரிகள் அறிவிப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் நிர்ணயித்த காலக்கெடுவாகும். இருப்பினும், பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டபோதிலும், இதுவரை எந்த ஒப்பந்தமும் நிறைவேறவில்லை. இந்த தாமதத்திற்குக் காரணம் என சர்வதே ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
அதன்படி, முன்மொழியப்பட்ட 26% கூடுதல் வரியை நீக்க இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. தற்போது 50% வரை வரிகளை எதிர்கொள்ளும் இந்திய எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்கவும், 25% வரி விதிக்கப்படும் வாகன பாகங்கள் மீதான வரிகளைக் குறைக்கவும் இந்தியா விரும்புகிறது. அதே நேரத்தில், இந்தியா தனது தொழிலாளர் மிகுந்த தொழில்களுக்கு அமெரிக்க சந்தையை சிறப்பாக அணுக முயல்கிறது.
இதில் ஜவுளி, ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், தோல் பொருட்கள், ஆடைகள், பிளாஸ்டிக், ரசாயனங்கள், இறால், எண்ணெய் வித்துக்கள், திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் போன்ற துறைகள் அடங்கும். மறுபுறம், அமெரிக்கா தொழில்துறை பொருட்கள், மின்சார வாகனங்கள், பெட்ரோ கெமிக்கல்கள், ஒயின்கள், பால் பொருட்கள், ஆப்பிள்கள், மரக் கொட்டைகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு வரிச் சலுகைகளைக் கேட்கிறது என இந்திய டுடே (india today) ஊடகத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தைகளில் தங்களுடைய விவசாயம், பால் மற்றும் மரபணு மாற்றப்பட்ட (GM) தயாரிப்புகளை இறக்குமதி செய்ய அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இது, நம் நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என இந்தியா வாதிடுகிறது. இருப்பினும், விவசாயம் மற்றும் பால் பொருட்கள் விஷயத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மேலும், இந்தியா தனது ஆசிய உறவுகளைவிடப் போட்டித்தன்மையைப் பெற குறைந்த கட்டண விகிதங்களை நாடுகிறது என மின்ட் (Mint) ஊடகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏற்படுவதற்கான மற்றொரு மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாடு ஆகும். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி பார்த்தால், ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. எனினும், இந்தியாவும் அமெரிக்காவும் விரைவில் ஓர் உடன்பாட்டை எட்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், இது ஆகஸ்ட் 1 காலக்கெடுவைத் தாண்டியும்கூட நேரம் எடுக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். இரு நாடுகளும் முதலில் ஓர் அடிப்படை வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யலாம். அதன்படி, ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 26 சதவீதமாக அதிகரிக்கும். அதேநேரத்தில், இன்னும் விரிவான ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் அக்டோபர் அல்லது நவம்பர் வரை தொடரலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேச்சுவார்த்தைகள் ஒருபுறமிருக்க, மறுபுரம் இரு நாடுகளும் வலுவான வர்த்தக உறவுகளைக் காட்டியுள்ளன. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 22.8% அதிகரித்து 25.51 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியும் 11.68% அதிகரித்து, அதே காலகட்டத்தில் 12.86 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.