உலக வெப்பமயமாதல் காரணமாக பூமியின் ஒட்டுமொத்த வெப்ப நிலையே சில டிகிரிகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வானிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு பசிபிக் பெருங்கடலில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் பதிவானதால் சூப்பர் எல் நினோவும் உருவானது.
பொதுவாக, எல் நினோ உருவானால் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வழக்கத்தைவிட குறைவான மழைப்பொழிவே பதிவாகும். இதனால் அடுத்து வரும் கோடையில் குடிநீர் பற்றாக்குறை, உணவுகளின் விலை உயர்வது போன்ற நிகழ்வுகளையும் இந்தியா சந்திக்கும். இதனால் இந்த ஆண்டும் இந்த நிலை தொடருமா என்ற அச்சம் நிலவியது.
ஆனால், எல் நினோ விளைவைத் தலைகீழாக்கும் ஒரு நிகழ்வு தற்போது இந்தியப் பெருங்கடலில் நடந்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். Indian Ocean Dipole எனப்படும் இந்தியப் பெருங்கடல் இருமுனை நிலை ஏற்பட்டுள்ளதால் எல் நினோ விளைவைத் தாண்டி தெற்காசியப் பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் என ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Positive IOD என அழைக்கப்படும் இந்த நிகழ்வின்போது இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதி வழக்கத்தைவிட அதிக வெப்பமடைகிறது. அதே நேரம், மற்றொரு பகுதி வழக்கத்தைவிட அதிக குளிரடைகிறது. தற்போது அரபிக்கடல் பகுதியில் இருந்து ஆப்பிரிக்க பக்கம் வரை கடல் நீர் இயல்பைவிட அதிக வெப்பமடைந்துள்ளது. அதேநேரம், இந்தோனேசியா முதல் ஆஸ்திரேலியா வரையுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் இயல்பைவிட குளிர்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாக இந்தியா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அதிக மழைப்பொழிவு பதிவாகும் என்றும், கென்யா, சோமாலியா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவு அதிகனமழை பெய்யும் என்றும், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வறட்சி ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலை அரபிக்கடலைச் சூடாக்கி, மேகங்களை உருவாக்கி, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பருவமழையைத் தீவிரப்படுத்திப் பரவலான மழையைத் தருவதால் இது இந்தியாவுக்கு சாதகமான நிலையை உருவாக்கும் இயற்கை மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.