ஐ.நா. பொதுச் சபையில் அமெரிக்காவின் தடைகள், அழுத்தம், அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் தலைகுனியமாட்டோம் என்று உறுதியளித்த ஈரான் அதிபர் பெஷெஷ்கியன், எந்த நிர்ப்பந்தத்தையும் ஏற்காமல் பேச்சுவார்த்தை தொடரத் தயாராக இருப்பதாக கூறினார். இதனை முன்னிறுத்தி, ஹைதராபாத் ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் பாகுபலி போர்க்கள காட்சியை பகிர்ந்து, தாய்நாட்டுக்காக இரத்தம் சிந்தத் தயார் என பதிவிட்டது.
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற 81வது ஐ.நா. பொதுச் சபையில் பேசிய ஈரான் அதிபர் பெஷெஷ்கியன், முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் "நாங்கள் ஒருபோதும் தலைகுனியவோ மண்டியிடவோ மாட்டோம், தடைகள். அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் ஈரானிய மக்களின் உறுதியை மட்டுமே வலுப்படுத்தும்” என்று கூறினார். மேலும் எந்த நிர்ப்பந்தத்தையும் ஏற்காமல் பேச்சுவார்த்தையை தொடர ஈரான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தசூழலில் ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் உரையை மேற்கோள் காட்டி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ஹைதராபாத்தின் ஈரான் தூதரகம் பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸ் போர்க்களத்தில் வீரர்களை வழிநடத்தும் படக்காட்சியை பதிவிட்டுள்ளது.
அந்த எக்ஸ் தள பதிவில், “ஐ.நா. பொதுச் சபையில் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அதிபர் டாக்டர் பெஷெஷ்கியன், 'நாங்கள் ஒருபோதும் தலைகுனியவோ மண்டியிடவோ மாட்டோம்' எனக்கூறினார். காலக்கேயர்களுக்கு எதிராக நின்ற பாகுபலியைப் போல. நாங்களும் எங்கள் தாய்நாட்டிற்காக சொந்த இரத்தத்தைத் தியாகமாகச் சிந்துவோம்" என்று வீடியோ கிளிப் உடன் தூதரகம் எழுதியுள்ளது.