போர் பதற்றம் நிலவுவதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்காசிய நாடுகளுக்கு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அணு ஆயுதம் தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாகக் கூறி கடந்த 13 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா ஈரானின் அணு சக்தி மையங்கள் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், கோபமடைந்த ஈரான் அமெரிக்கா மீதும் தாக்குதலை தொடங்கியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக, அப்பகுதி வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால், அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானங்கள் அனைத்தும் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. துபாய் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் வளைகுடா நாடுகளுக்கு ஸ்பைஸ்ஜெட் விமான சேவையின் அனைத்து புறப்பாடும் நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளும் வான்பரப்பை மூடியுள்ளன.
சென்னையில் இருந்து மத்திய கிழக்கு பகுதிகளுக்கு செல்லக்கூடிய 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள் மற்றும் 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், போர் பதற்றம் காரணமாக தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.