டெல்லியில் இருந்து இந்தோனேஷிய தலைநகர் பாலிக்கு ஏர் இந்திய விமானம் AI2145 கிளம்பியது. பாலி விமான நிலையத்திற்கு அருகில் எரிமலை வெடிப்பு நிகழ்வதாக வந்த தகவல்கள் காரணமாக பாதுகாப்பு நலன் கருதி விமானம் மீண்டும் டெல்லிக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. இதனையடுத்து ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்கே திரும்பியது.
ஏர் இண்டியா விமானம் டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கிய நிலையில் பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விமானம் டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் அனைத்து பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணம் ரத்தானதால் பயணிகள் முழு பணத்தையும் திரும்பப் பெறும் வகையிலோ அல்லது பயணத்திட்டத்தினை மாற்றியமைக்கும் வகையிலோ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலியில் உள்ள லிவோடோபி லாகி லாகி எனும் மலைப் பகுதியில் நேற்று முதல் மிகக் கடுமையான எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 11 கிமீ உயரம் வரை புகை வெளியேறியது. தொடர்ந்து வெடிப்புகள் ஏற்பட்டதால் பல நாடுகளில் இருந்து அப்பகுதிக்கு செல்லக்கூடிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.