ட்ரூங் மை லான் எக்ஸ் தளம்
உலகம்

வியட்நாமை திரும்பி பார்க்க வைத்த மோசடி வழக்கு.. ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு மரண தண்டனை உறுதி!

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி வியட்நாம் நாட்டின் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ட்ரூங் மை லான், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனாலும், அவரது தண்டணையைக் குறைக்க எந்தக் கரிசனமும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

Prakash J

வியட்நாம் நாட்டின் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ட்ரூங் மை லான் என்ற 68 வயது பெண்மணி, கடந்த 2012 முதல் 2022 வரை சைகோன் ஜாயின்ட் ஸ்டாக் கமர்ஷியல் வங்கியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான போலியான நிறுவனங்கள் மூலமாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலமாகவும் மோசடி வேலையில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது, அந்நாட்டின் மிகப் பெரிய மோசடி வழக்குகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அவர், 12.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி) மதிப்பிலான அளவுக்கு மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மோசடி வியட்நாம் நாட்டின் 2022 ஜிடிபியில் கிட்டத்தட்ட 3% ஆகும். இந்த வழக்கை தெற்கு வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் உள்ள மக்கள் நீதிமன்றம் விசாரித்து வந்தநிலையில், குற்றம்சாட்டப்பட்ட பெண் தொழிலதிபருக்கு, கடந்த ஏப்ரல மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஹோசிமின் நகர மக்கள் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

இதையடுத்து, அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், ட்ரூங் மை லான்-க்கு வழங்கப்பட்ட தண்டணையைக் குறைக்க எந்தக் கரிசனமும் இல்லை என நீதமன்றம் தெரிவித்தது. அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மரண தண்டனை உறுதியாகியுள்ளது.

வீண் ஆனது தண்டனையை நிறுத்தி வைக்கும் முயற்சிகள்..

முன்னதாக, அவர் மோசடி செய்த 12 பில்லியன் டாலர் தொகையில் மூன்றில் இரண்டு பங்கான 9 பில்லியன் டாலரை திருப்பிச் செலுத்தினால், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து இறுதி முயற்சியாக வியட்நாம் நாட்டின் குடியரசுத் தலைவரின் மன்னிப்பை நாடுவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் 9 பில்லியன் டாலரை திரட்ட, அவரது சட்டக் குழு கடன் மற்றும் முதலீடுகளை தீவிரமாகத் தேடி வருகிறது. ஆனால் அவரது சொத்துக்களில் பெரும்பகுதி மாநிலத்தால் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலபதி - யார் இந்த ட்ரூங் மை லான்?

தனது தாயாருடன் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்த ட்ரூங் மை லான், வியட்நாம் நாட்டில் 1986இல் நடைபெற்ற பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கை காலத்தில் ரியல் எஸ்டேட்டில் நுழைந்து நிலம், வீடு வாங்கி விற்கும் பணிகளைச் செய்தார். 1990களில் மிகப்பெரிய ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட்களின் உரிமையாளராகி, ரியல் எஸ்டேட் சாம்ராஜ்ஜியத்திற்கு தலைவர் ஆனார். அக்டோபர் 2022இல் அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ட்ரூங் மை லானின் மோசடி நடவடிக்கைகள் அம்பலமானது. நாட்டின் ஐந்தாவது பெரிய கடன் வழங்குநரான சைகோன் கமர்ஷியல் வங்கியை (எஸ்சிபி) அவர் ரகசியமாகக் கட்டுப்படுத்தியதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

இந்த மோசடியால் ஆயிரக்கணக்கான சாதாரண குடிமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த மோசடியை மறைக்க, முன்னாள் வங்கி நிர்வாகிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட லானும் அவரது சக பணியாளர்களும் அரசு அதிகாரிகளுக்கு டாலர் 5.2 மில்லியன் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது வியட்நாமின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய லஞ்சமாகும். விசாரணையில், லானின் கணவர், ஹாங்காங் தொழிலதிபர் மற்றும் அவரது மருமகள் உட்பட 85 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கும் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.