donald trump and Katie Zacharia ani
உலகம்

மை president.. மை husband! ஷாக் தந்த டிரம்பின் செய்தித் தொடர்பாளர் - நேரலையில் சொதப்பல்!

அதிபர் தனது கணவர் எனத் தவறுதலாகக் குறிப்பிட்ட வெள்ளை மாளிகையின் புதிய செய்தித் தொடர்பாளர்.. அடுத்த நொடியே தனது வார்த்தைகளைத் திருத்திக்கொண்ட சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளராக கேட்டி ஜக்காரியா நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சியினர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், இந்த நியமனம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Katie Zacharia

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் கேட்டி ஜக்காரியா தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது, “அதிபர் டிரம்புடன் பணியாற்றுவதில் பெருமையடைகிறேன். என் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவருக்காக நீண்ட காலமாகப் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தனது குடும்பத்தையும் புதிய பொறுப்பையும் எவ்வாறு சமாளிக்கப்போகிறார் என்பது குறித்துப் பேசினார். தனக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், குழந்தைகளுடன் மாலை நேரத்தைச் செலவிடாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

அப்போது தனது கணவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “My President... Excuse me, my husband” என்று திடீரெனக் கூறினார். அதாவது, “எனது அதிபர்... மன்னிக்கவும், எனது கணவர்” எனத் தனது வார்த்தைகளை உடனடியாகத் திருத்திக்கொண்டார்.

donald trump

இந்த எதிர்பாராத வார்த்தைப் பிழையால் செய்தியாளர் சந்திப்பில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து, அவரும் சிரித்துக்கொண்டே, “அது நல்ல விஷயம்!” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

சுமார் 14 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மூன்று செய்தி நிறுவனங்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துவிட்டு வெளியேறினார். இந்தச் சந்திப்பின்போது ஏற்பட்ட வார்த்தைப் பிழை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.