வெனிசுலாவைச் சேர்ந்த அமிரா மொரோனா, மிஸ் டீன் யுனிவர்ஸ் பட்டம்வென்று உலக அழகியாக தேர்வாகியுள்ளார்.
பதின் பருவ வயதினருக்கான சர்வதேச அழகிப் போட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ஜெர்மனி, இந்தியா, பஹாமாஸ், சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, டொமினிகன் குடியரசு, இந்தோனேசியா, மெக்ஸிகோ, மொராக்கோ, நேபாளம், நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், சியரா லியோன், ஸ்பெயின், டர்க்ஸ் மற்றும் கைகோஸ், உகாண்டா, இங்கிலாந்து, அமெரிக்கா, வெனிசுலா மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 22 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் நீச்சல் போட்டி, தொடக்க விளக்கக்காட்சிகள் மற்றும் கேள்வி பதில் பிரிவு உள்ளிட்ட பல சுற்றுகள் இடம்பெற்றன.
உடல்வாகு, தன்னம்பிக்கை, வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட அம்சங்களில் போட்டியாளர்கள் மதிப்பிடப்பட்டனர். இந்தப் போட்டியில், வெனிசுலாவைச் சேர்ந்த 16 வயதான அமிரா மொரோனா, நடுவர்களின் மனதையும் மதிப்பெண்களையும் வென்று, மிஸ் டீன் யுனிவர்ஸ் பட்டத்தை தனதாக்கினார். வெனிசுலாவின் லாரா மாகாணத்தில் பிறந்த அமிரா, ஒவ்வொரு சுற்றிலும், பார்வையாளர்கள் மற்றும் நடுவர்களின் மனதை கொள்ளை கொண்டார். மேலும், வெனிசுலாவுக்கு இந்தப் பட்டத்தைப் பெற்றுத் தந்த முதல் அழகியாகவும் அமிரா திகழ்கிறார்.
இதுகுறித்து அவர், “இந்த மதிப்புமிக்க பட்டத்தை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். என் குடும்பத்தினர், என் அம்மா மற்றும் எனக்கு ஆதரவளித்த வெனிசுலாவில் உள்ள அனைவருக்கும் நன்றி. இந்தியாவில் அற்புதமான இடங்கள், அன்பான மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட மக்கள் மற்றும் சுவையான உணவு உள்ளது. நான் இங்கு மிகச் சிறந்த நேரத்தைக் கழித்தேன், அனைவரும் இங்கு வருமாறு ஊக்குவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த சியாரா கோட்ஸ்சாக் முதல் ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார், அதே நேரத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த சப்ரினா ஃப்ரக்டஸ் இரண்டாவது ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார்.