ட்ரம்ப், மோடி எக்ஸ் தளம்
உலகம்

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி.. ஏப்ரல் 2 முதல் அமல்.. ட்ரம்ப் அதிரடி!

இந்தியா உள்ளிட்ட நாடுகள், அமெரிக்காவிற்கு விதிக்கும் வரிகள் நியாயமின்றி இருப்பதால் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பரஸ்பர வரி முறை அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

PT WEB

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார். அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்ற பின், நாடாளுமன்றத்தில் முதல் உரையை ஆற்றிய ட்ரம்ப், பல தசாப்தங்களாக பல நாடுகள், அமெரிக்காவை பயன்படுத்திக்கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். ஐரோப்பா, சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள், தாங்கள் விதிக்கும் வரியைவிட பல மடங்கு அதிக வரியை விதித்திருப்பதாக குற்றம்சாட்டினார். அமெரிக்க வாகனங்களுக்கு இந்தியாவில் 100 % வரி விதிக்கப்படுவதாகவும் அவர் சாடினார்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, reciprocal எனப்படும் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். reciprocal என்பது ஒருநாடு எந்த அளவு வரிவிதிக்கிறதோ, அதே அளவு வரியை அந்த நாட்டுக்கு விதிப்பதாகும். அமெரிக்காவின் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் இந்தியாவுடனான சரக்கு வர்த்தகம் 129.2 பில்லியன் டாலராக இருந்தது.

ட்ரம்ப் - மோடி

2024 ல் இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஏற்றுமதி 41.8 பில்லியன் டாலராக இருந்தது. இது 2023ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 3.4 % அதிகமாகும். அதேபோல இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது 87.4 பில்லியன் டாலராக இருந்தது. இது 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.5%அதிகம். அமெரிக்கா, இந்தியா இடையேயான வர்த்தக பற்றாக்குறை 45.7 பில்லியன் டாலராக இருக்கிறது. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.4% அதிகமாகும். இதற்கிடையே அமெரிக்கா சென்றுள்ள மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் Howard Lutnick -ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். முன்னதாக, மெக்சிகோ, கனடா நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருந்த 25% வரி நடைமுறை மார்ச் 4 முதல் அமலுக்கு வந்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கும் நடைமுறையும் அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தகம் வைத்துள்ள மற்ற நாடுகளுக்கும் பரஸ்பர வரியை அமல்படுத்த ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதால் உலகளாவிய சந்தையில் இதன் தாக்கம் இனிவரும் நாட்களில் பேரதிர்வாக ஒலிக்கும் என்று கணிக்கப்படுகிறது.