பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர், பல தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது. இதில் காஸாவில் கடந்த 16 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, பிணைக்கைதிகளில் சிலர் மட்டுமே திரும்ப அனுப்பப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை அனுப்புதை ஹமாஸ் நிறுத்திவைத்துள்ளது.
இந்த நிலையில், “பிணைக் கைதிகள் அனைவரையும் விரைவில் விடுவிக்காவிட்டால், ஹமாசுக்கு முடிவு கட்டப்படும்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ட்ரூத் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ”ஹமாஸ் அமைப்பினர், தங்கள் பிடியில் உயிருடன் உள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவித்து, கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் ஒப்படைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். இந்த விவகாரத்திற்கு முடிவுகட்ட தேவையான அனைத்து உதவிகளையும் இஸ்ரேலுக்கு செய்துவருவதாக குறிப்பிட்ட அவர், பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் ஹமாஸ் அமைப்பின் ஒரு உறுப்பினர்கூட உயிருடன் இருக்க முடியாது என தெரிவித்தார். பிணைக் கைதிகளை விடுவித்து காஸாவை விட்டு வெளியேறாவிட்டால், ஹமாஸ் அமைப்பிற்கு முடிவு கட்டப்படும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளை வெள்ளை மாளிகையில், ட்ரம்ப் சந்தித்து கலந்துரையாடினார்.