இஸ்ரேல் - ஹமாஸ்
இஸ்ரேல் - ஹமாஸ்முகநூல்

எச்சரித்திருந்த ட்ரம்ப்...போர் நிறுத்த ஒப்பந்தம் போட்ட இஸ்ரேல் - ஹமாஸ்!

அமெரிக்க அதிபராக வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ள டிரம்ப், விரைவில் போரை நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Published on

காசாவில் 15 மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தி வந்தது. ஏராளமான உயிர்கள் பலிக் கொடுக்கப்பட்டதுடன், கடும் பொருட்சேதங்களை ஏற்படுத்திய இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் முயற்சித்து வந்தன. பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த வேளையில், இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே போர்நிறுத்தம் குறித்து இறுதி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ்
’பல கோடிப்பு..’ மார்க் ஜூக்கர்பெர்க் எடுத்த அதிரடி முடிவு... ஆடிப்போன ஊழியர்கள்!

இஸ்ரேலிடம் இருக்கும் பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதால், 15 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது.

19ஆம் தேதி முதல் காசாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளதால், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுவெளியில் கூடியவர்கள் இதனை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அமெரிக்க அதிபராக வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ள டிரம்ப், விரைவில் போரை நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வரவேற்ற உலக நாடுகள்!

காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஏற்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. காசா போர்நிறுத்தம் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 400 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி என தெரிவித்தார். மேலும், இந்த முடிவு பல இழப்புகளை சந்தித்த பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை கிடைக்க உதவும் என பைடன் கூறினார்.

காசாவில் போர்நிறுத்தம் அமலாகுவதற்கு தனது நிர்வாக முயற்சியே காரணமென அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காசா மீண்டும் ஒருபோதும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக முயற்சியை மேற்கொள்ள விருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

காசா போர்நிறுத்தம் அனைவருக்குமான நல்ல செய்தி என்றும், நீண்ட காலமாக நிலவி வரும் மோதலுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். போர்நிறுத்தம் சரியான மற்றும் அவசியமான நடவடிக்கை என்றும், இஸ்ரேலிய மக்களை மீண்டும் திரும்பிக் கொண்டுவருவதைவிட மிகப்பெரிய தார்மீக, மனிதாபிமான கடமை எதுவுமில்லை என இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறினார்.

இஸ்ரேல் - ஹமாஸ்
’பல கோடிப்பு..’ மார்க் ஜூக்கர்பெர்க் எடுத்த அதிரடி முடிவு... ஆடிப்போன ஊழியர்கள்!

இது ஒரு எளிய சூழ்நிலை அல்ல எனவும், நம் முன்நிற்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டுமென என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான காசாவில் போரினால் ஏற்படும் மிகப்பெரிய துன்பங்களைக் குறைப்பதே தற்போதைய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

காசா போர்நிறுத்த ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் வலியுறுத்தியுள்ளார். காசா விவகாரத்தில் ஒரு அரசியல்தீர்வு ஏற்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார். இங்கிலாந்து, இத்தாலி, ஏமன், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் என உலகின் பல்வேறு நாடுகளும் காசா போர்நிறுத்தத்தை வரவேற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com