பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடப்பதற்கு முன்பாக பதிலடி வரி குறித்த முக்கிய உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். தங்கள் பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க பல்வேறு நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. தங்கள் வலியுறுத்தலை ஏற்காத நாடுகளின் பொருட்களுக்கு அதிகளவில் இறக்குமதி வரி விதித்து பதிலடி கொடுக்கப்படும் என ட்ரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பதிலடி வரி விதிப்பை நடைமுறைப் படுத்துவதற்கான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் எந்தளவு வரி விதிக்கின்றனவோ அதற்கு இணையான வரியை அந்நாட்டு பொருட்களுக்கும் அமெரிக்கா விதிக்க இந்த உத்தரவு வழி செய்கிறது. இதன் காரணமாக அமெரிக்க பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டிய நெருக்கடி இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2.30 மணிக்கு சந்திக்கிறார் பிரதமர் மோடி. இந்தச் சந்திப்பின்போது வரி விகிதங்கள், வணிக உறவுகள், குடியேற்ற பிரச்னை, பாதுகாப்பு என பல விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.