டொனால்டு ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா | சட்டவிரோத குடியேறிகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் அதிரடிச் சலுகை!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் அதிரடிச் சலுகை வழங்கியுள்ளது.

Prakash J

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அதில், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையும் ஒன்று. அதாவது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளார். தவிர, சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு, ராணுவ விமானங்கள் மூலம் அந்தந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தியர்களும் அவ்வாறு கடந்தகாலங்களில் நாடு கடத்தப்பட்டனர். இன்னும் சிலரோ சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

அதிபர் ட்ரம்ப்

இந்த நிலையில், வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு, 1000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என ட்ரம்ப் அரசு தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பின்படி, சுமார் 84 ஆயிரம் ரூபாய் ஆகும். அதேபோல், தாமாக வெளியேறுபவர்களுக்கான பயணச் செலவையும் தாங்களே ஏற்றுக்கொள்ளவதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து வெளியேற்றிய ட்ரம்ப் நிர்வாகம், தற்போது தாமாக வெளியேறுபவர்களுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.